×

“கேப்டன் குடும்பத்துக்கு ஒரு கார் வாங்கக் கூட தகுதி இல்லையா?” - பிரேமலதா ஆவேசம்

 
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு தே.மு.தி.க யாரும் எதிர்பாராத வகையில் தி.மு.க கூட்டணியில் இணைந்தது.

தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு 8 சட்டமன்றத் தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபா எம்.பி சீட்டும் கொடுக்கப்பட்டது. அதன்படி, தே.மு.தி.க-வின் எல்.கே.சுதீஷ் ராஜ்ய சபா எம்.பி ஆனார். 

தே.மு.தி.க., தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்த பிறகு, தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவருடைய மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர்  ரூ.3 கோடி மதிப்புள்ள லேண்ட் ரோவர் டெஃபெண்டர் கார் வாங்கியதாகவும் அவர்கள் அந்த காரில் பயணிப்பதாகவும் சமூக வலைதளங்களில் ஒரு படம் பகிரப்பட்டு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும், தி.மு.க-விடம் பணம் பெற்று வாங்கியதாக புகார்கள் கூறப்பட்டன.

இந்நிலையில், தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ராஜ்ய சபா எம்.பி எல்.கே. சுதீஷ் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்த பிறகு, ரூ.3 கோடி மதிப்புள்ள லேண்ட் ரோவர் டெஃபெண்டர் கார் வாங்கியதாக பிரேமலதா விஜயகாந்த் மீது சமூக வலைதளங்களில் எழுந்துள்ள புகார்கள் குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.

இதற்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாத், கார் வாங்கியது எங்கள் நிர்வாகிகளுக்கே தெரியும். இருந்தாலும் நீங்கள் கேட்பதனால் சொல்கிறேன். உண்மைக்கு புறம்பாக, உண்மை இல்லாத விஷயத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கு தே.மு.தி.க-வைப் பற்றி சொல்வதற்கு எதுவுமே கிடையாது. குறை சொல்வதற்கு வேறு எதுவுமே இல்லை. லஞ்சம் ஊழல் வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு, கள்ளச்சாரயம் வழக்கு, குண்டர் சட்டத்தில் கைது, கனிமவளக் கொள்ளை வழக்கு என இந்த மாதிரி ஒரு குற்ற வழக்கு இருக்கிறது என்று தே.மு.தி.க மீது யாராவது ஒரு குற்றம் சுமத்த முடியுமா? 21 ஆண்டுகள் ஆன கட்சி, 29 எம்.எல்.ஏ-க்கள் வெற்றி பெற்று சட்ட சபைக்கு எதிர்க்கட்சியாக போன கட்சி. 1 சதவீதம் யாராவது தே.மு.தி.க மேல் களக்கம் விளைவிக்க முடியுமா? முடியவே முடியாது.

அப்படியென்றால், இந்த கட்சியை எப்படி அவமானப்படுத்த வேண்டும், எதிர்மறையாக எப்படி செய்திகளைப் பரப்ப வேண்டும் என்று அவர்கள் (எதிர்க்கட்சிகள்) யோசிக்கிறபோது, அவர்களுகு தெரிந்தது இரண்டே விஷயங்கள்தான். விஜயகாந்த்தை தவறானவராக குடிக்கிறார், அடிக்கிறார், கோபப்படுகிறார் என்று அவரை அசிங்கப்படுத்தி, கேவலப்படுத்தி எப்படி அவரைப் பற்றி எதிர்மறையாக மக்களிடம் கொண்டுபோனார்களோ, அதே போல, இன்றைக்கு என் மீதும் எங்கள் தலைமையின் மீது களங்கத்தை வைத்து குற்றம் சொல்வது என்றால் ஒன்று பேரம், இன்னொன்று பெட்டி. இதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும். வேறு சொல்வதற்கு ஒன்றுமே இல்லாததனால், இன்றைக்கு அதையே பிடித்து மறுபடியும் மறுபடியும் சொல்லிக்கொண்டிருப்பதனால், இன்றைக்கு மக்கள் தெளிவாகி விட்டார்கள். அவர்கள் (எதிர்க்கட்சிகள்) சொல்வது 1 சதவீதம் கூட உண்மை இல்லை என்பதை அவர்கள் போடும் பதிவுகள் மூலமாக நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். 

இது எங்கள் கட்சியில் இருக்கிறவர்களுக்கு தெரியும். நாங்கள் ஒரு வண்டி வாங்கி ஒன்றரை வருடத்துக்கு மேல் ஆகிறது. அதை திருப்பதிக்கு எடுத்துக்கொண்டு போனால், அதை இப்போதுதான் வாங்கினோம் என்கிறார்கள். என்னயா நடக்குது? ஒரு வண்டி வாங்குகிற தகுதிகூட கேப்டன் குடும்பத்துக்கு இல்லையா? நான் கேட்கிறேன், ஒரு கார் வாங்குகிற தகுதி கேப்டன் குடும்பத்துக்கு இல்லையா? கொடுத்து கொடுத்து சிவந்த கரத்துக்கு சொந்தக்காரர் கேப்டன். தான் சம்பாதித்ததில் 90 சதவீதம் மக்களுக்காக உதவி செய்தவர் கேப்டன். அவர் செய்த ஒவ்வொரு உதவிக்கும் பின்னால் இருந்தவள் நான் என்பதை இந்த உலகம் அறியும். அதனால், குறை சொல்கிற வாய், குறை சொல்லிக்கொண்டுதான் இருக்கும். குரைக்கிற நாய், குரைத்துக்கொண்டுதான் இருக்கும். அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்கிற அவசியம் தே.மு.தி.க-வுக்கோ எங்களுக்கோ கிடையாது என்பதை உறுதியாக நான் சொல்கிறேன். தே.மு.தி.க 0.5 சதவீதம்தானே எங்களை விட்டுவிடுங்கள், ஏன் தே.மு.தி.க-வைப் பற்றி பேசுகிறீர்கள்.” என்று கொந்தளிப்பாகப் பேசினார்.