☰
×

“ஆடிட்டர் தவறால் விஜய் வெற்றியை செல்லாது என்பதா?”- ஐகோர்ட் அதிரடி கேள்வி

 

சொத்துக்களை குறைத்துக் காட்டியதற்காக தேர்தலை செல்லாது என அறிவிக்க முடியுமா? என பெரம்பூர் தொகுதியில் தனது வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு விசாரணையின்போது சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பண்ருட்டியில் உள்ள ரூ.30 கோடி சொத்தை வேட்புமனுவில் முதல்வர் விஜய் மறைத்ததாக விஜய் வெற்றியை எதிர்த்து வாக்காளர் தினேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக்கோரி முதல்வர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன், சொத்துக்களை குறைத்துக் காட்டியதற்காக தேர்தலை செல்லாது என அறிவிக்க முடியுமா? சூப்பர் ஸ்டார் ஆன விஜய், 600 கோடி ரூபாய் சொத்துக் கணக்கை காட்டியுள்ள நிலையில், 30 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை தெரிவிக்கவில்லை என்றால், அது எப்படி அவருடைய தேர்தல் வெற்றியை பாதிக்கும்?

கோடீஸ்வரரிடம் எங்கெல்லாம் சொத்து இருக்கிறது எனக் கேட்டால் அவருக்கு எப்படி தெரியும்? ஆடிட்டர் செய்த தவறுக்காக முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் விஜயின் தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க முடியுமா? முதல்வர் விஜய் தனது சொத்துகளின் பட்டியலை ஆடிட்டரை நம்பி வழங்கியிருப்பார். அவர் தான் அந்த சொத்துப்பட்டியலை வேட்புமனுவில் தாக்கல் செய்திருப்பார். ஆடிட்டர் சில தவறுகளை செய்திருந்தால் அதற்கு விஜய்யைப் பொறுப்பாக்கி அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார். பின்னர் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.