×

அரசு மருத்துவமனையில் மதுபோதையில் சிகிச்சை அளித்த மருத்துவர் சஸ்பெண்ட்

 

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மதுபோதையில் பணியில் இருந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் கண்ணன் என்பவரை தற்காலிக பணிநீக்கம் செய்து சென்னை மருத்துவ கல்வியக இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று காலை புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் மது போதையில் பொது மருத்துவர் கண்ணன் என்பவர் ஆண்கள் பிரிவில் சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மருத்துவர் கண்ணனை சிகிச்சை அளிக்கப்பட்ட இடத்திலிருந்து வெளியேற்றிய சக மருத்துவர்கள் மாற்று மருத்துவர்கள் மூலம் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் புற நோயாளிகளுக்கு மதுபோதையில் சிகிச்சை அளித்த சம்பவம் பல்வேறு தரப்பினரின் கண்டனத்திற்கு உள்ளாகியது.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் மருத்துவர் கண்ணனுக்கு உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது அதற்கு உரிய விளக்கம் அளிக்காத நிலையில் இன்று சென்னை மருத்துவ கல்வியக இயக்குனர் மருத்துவர் கண்ணனை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். தூத்துக்குடியில் மது போதையில் பணி செய்த மருத்துவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.