×

போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றுவதா..? - அமைச்சர் கீர்த்தனாவை கடுமையாக சாடிய தங்கம் தென்னரசு..!

 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட கீர்த்தனா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அசோகனை சுமார் 11,670 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 51,078 வாக்குகளை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இந்த நிலையில், மே 10- ஆம் தேதி அன்று சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் முதலமைச்சராக விஜய்யும், அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், சி.டி.ஆர்.நிர்மல்குமார், கீர்த்தனா உள்பட 9 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது. அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டவர்களுக்கான இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஒரே ஒரு பெண் அமைச்சரான கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் மிக முக்கிய துறைகளில் ஒன்று தொழில்துறை.

இந்த நிலையில், கடந்த திமுக அரசு 10.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்துவிட்டு சென்றுள்ளதாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கூறியுள்ளதற்கு திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், திருச்சுழி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, "முற்றிலும் உண்மைக்குப் புறம்பாகவும், மாநிலத்தின் நிதி நிர்வாகம் குறித்தான சாதாரண அடிப்படைப் புரிதல் இல்லாமலும், "பத்தரை லட்சம் கோடி எடுத்துட்டு கழுவிட்டுப் போய்ட்டாங்க” என்று போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழில்துறை அமைச்சர் அவர்கள் அவதூறு பரப்புவதும், உள் நோக்கோடு கழகத்திற்கு எதிராக ஆதாரமில்லாமல் மக்களிடையே ஒரு மாய பிம்பத்தை சமூக வலைதள ஜோடனைகள் மூலம் கட்டமைக்க முயற்சிப்பதும், விஷமத்தனமானது மட்டுமல்ல; வன்மையாகக் கண்டிக்கத்தக்கனவும் ஆகும்.

அரசு நிர்வாகத்தில் அனுபவமின்மை காரணமாக, மக்களை ஏமாற்றிக் குழப்பும் வகையில் தமிழ்நாட்டின் நிதி நிர்வாகம் குறித்து இட்டுக்கட்டிக் கூறுவது அவரது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது எனினும், அரசு நிர்வாகத்திலும், அமைச்சரவையிலும் பல ஆண்டுகள் அனுபவமிக்கவரான நிதி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களும், நிதித்துறை நிர்வாக நடைமுறைகளில் நேரடி அனுபவமிக்க தற்போதைய நிதித்துறை செயலாளர் அவர்களும் இடித்துரைத்து தொழில் துறை அமைச்சரின் கற்பனைக் குதிரைக்குக் கடிவாளம் போட்டு நிறுத்த முன்வருவார்களா? அல்லது பொய்யும், புனைகதைகளும் மிக்க இத்தகைய மலிவான பிரச்சாரங்களுக்குத் துணை போகப் போகிறார்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.