×

வீ தி லீடர்ஸ் அமைப்பில் சேரணுமா..? விரைவில் மிஸ்டு கால் திட்டம் அறிமுகம்..!

 

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி, 'வீ தி லீடர்ஸ்' என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பு சார்பாக, கடந்த ஜூலை முழுவதும், போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இந்த மாதம் முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த, அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.அவரது அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் கூறியதாவது:'வீ தி லீடர்ஸ்' அமைப்பில், இதுவரை 19.47 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். குறைந்தது 50 லட்சம் பேரை சேர்த்த பிறகே, கட்சி தொடங்குவதாக, அண்ணாமலை உறுதியாக இருக்கிறார்.

ஆனால், அவரை பின் தொடர விரும்பும் கிராம மக்களும், இணையதள புரிதல் இல்லாதவர்களும், அமைப்பில் சேர முடியாமல் உள்ளனர்.எனவே, 'மிஸ்டு கால்' இயக்கத்தை அண்ணாமலை தொடங்க உள்ளார். ஏற்கனவே இத்திட்டத்தை சில கட்சிகள் முன்னெடுத்தன. அதுபோன்று, 'மிஸ்டு கால்' கொடுப்போரை, அப்படியே உறுப்பினராக சேர்க்காமல், அவர்களை தொடர்பு கொண்டு, விபரங்களை சேகரித்த பின், உறுப்பினர்களாக சேர்க்க திட்டமிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.