மெட்ரோவில் பயணிப்பவரா நீங்கள்..? உங்கள் பயணத்திற்கு பின்னால் இருக்கும் ஆபத்து..! ஐஐடி ஆய்வில் வெளியான அதிர்ச்சி உண்மை!
சென்னை வாழ் மக்கள் தேர்ந்தெடுப்பது மெட்ரோ ரயில் சேவையைத்தான் காரணம் சிக்னல், போக்குவரத்து நெரிசல், சாலை மறியல் போன்ற எந்த இடையூறும் இன்றி, எளிதாகவும், அதே நேரம் ஏசியுடன் சொகுசாகவும், முக்கியமாக குறித்த நேரத்தில் செல்லலாம்.பள்ளி செல்பவர்கள், பணிக்கு செல்பவர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் வரப் பிரசாதமாக அமைந்தது மெட்ரோ ரயில் சேவை என்றால் அது மிகையில்லை.
அதே நேரம் முழுக்க முழுக்க குளிர் சாதன வசதி உள்ளதால் சாலையில் உள்ள புழுதி, தூசி, மண், மாசு போன்ற எந்த காற்று மாசும் இல்லாமல், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் சென்று வரலாம் என்பதே, மெட்ரோ ரயில் சேவையை தேர்ந்தெடுக்க மிகப் பெரிய காரணமாக உள்ளது. ஆனால், மெட்ரோ ரயில் பயணம் மேற்கொள்ளும் லட்சக்கணக்கான மக்கள், தங்களுக்குத் தெரியாமலேயே கடுமையான காற்று மாசுபாட்டிற்கு ஆளாகின்றனர் என்றால் நம்ப முடிகிறதா உங்களால்?
இதுகுறித்து, ‘ஐஐடி மெட்ராஸ்’ மேற்கொண்ட கூட்டு ஆய்வு ஒன்றில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆலந்தூர் முதல் சென்னை சென்ட்ரல் இடையேயான இரண்டாவது வழித்தடத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சென்னை மெட்ரோவின் நிலத்தடி ரயில் நிலையங்களில் (Underground Stations) காற்று மாசு மற்றும் நச்சு வாயுக்களின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளதாக ஐஐடி மெட்ராஸ் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
ரங்கப்பாதைகளில் போதிய காற்று சுழற்சி மற்றும் முறையான காற்றோட்டம் இருப்பதில்லை. அத்துடன், சுத்திகரிப்புப் பொருட்கள் மற்றும் ஏசி வென்ட்களிலிருந்து வெளியேறும் ரசாயனங்கள் காரணமாகவும், வெளிப்புற காற்று மற்றும் தூசி எளிதாகச் சுரங்கங்களுக்குள் நுழைவதும் காரணமாக கூறப்படுகிறது.
இதேபோன்று, மேம்பால நிலையங்களிலும் இந்தப் பாதிப்பு இருமடங்காகப் பதிவாகியுள்ளது. ரயில்களுக்குள் இருக்கும் ஒட்டுமொத்த மாசுபாட்டில் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை ஆபத்தான நுண்ணிய துகள்கள் என்பதும்,
இவை நுரையீரலின் ஆழத்திற்குச் சென்று கடுமையான சுவாசப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் வரை இந்த காற்று புகாத இறுக்கமான சூழலில் பயணிப்பவர்களின் ஆரோக்கியம், கண்ணுக்கு தெரியாமல், மெல்ல மெல்ல பாதிக்கப்பட்டு வருகிறது என்ற அதிர்ச்சி தகவலையும் அளிக்கிறது இந்த ஆய்வுறிக்கை.
இந்நிலையில், இந்த ஆய்வு முடிவுகள் தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. குளிர்சாதன அமைப்புகளில் கிருமிநாசினி புற ஊதா (UV) விளக்குகள், சென்சார்களைப் பயன்படுத்துவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் கூட்டம் குறைவாக உள்ள மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரையிலான நேரங்களில் தூய்மைப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த நுண்ணிய துகள்கள் மூலம் கிருமித்தொற்றுகள் பரவும் அபாயம் இருப்பதால், மெட்ரோ நிலையங்களில் அனைத்துலக விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன காற்றோட்ட கண்காணிப்பு வசதிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் எனப் பொதுச் சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.