தூத்துக்குடி விமான நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்,, ஏன் தெரியுமா ?
தூத்துக்குடியில், சுமார் ரூ. 452 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான நிலையத்தை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்த விமான நிலையம் 2044 ஆம் ஆண்டு வரை சிறப்பாக செயல்படத்தக்க வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. முன்பு 1,350 மீட்டர் அளவில் மட்டுமே விமான ஓடுதளம் இருந்த நிலையில் தற்போது, 3,115 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்தும் வகையிலும், இரவு நேரத்தில் விமானங்கள் வந்து செல்லக் கூடிய வகையிலும் விமான நிலையம் விரிவாக்கப்பட்டுள்ளது
இதுதவிர, பல்வேறு அதிநவீன வசதிகளும் இந்த விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ளன. இதனால் மிகப் பெரிய ஏ - 321 ரக ஏர்பஸ் விமானங்கள் கூட தூத்துக்குடிக்கு வந்து செல்ல முடியும். மேலும், விரைவில் இந்த விமான நிலையத்திலிருந்து டெல்லி, மும்பை, கொச்சி, கொழும்பு, மலேசியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் விமானங்களை இயக்க ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, சர்வதேச அளவில் தூத்துக்குடி முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார் விமான சேவைகள் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து தினமும் சென்னைக்கு 4 விமான சேவைகள், பெங்களூருக்கு ஒன்று என 5 விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும், இங்கு இரவு நேர விமான சேவை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், பயணிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று (மார்ச் 29) முதல் இரவு நேர விமான சேவைகள் துவங்கப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னையிலிருந்து மாலை 6:15 மணிக்கு புறப்பட்ட விமானம், இரவு 7:55 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இரவு 8:15 மணிக்கு புறப்பட்டு இரவு 9:45 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்றடைந்தது.
இங்கு இரவு நேர விமான சேவையில் முதன்முறையாக பயணம் மேற்கொள்ள வந்த பயணிகளை, விமான நிலைய ஊழியர்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து, பயணிகளுடன் சேர்ந்து விமான நிலைய இயக்குநர் தலைமையில் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.