×

ஓட்டு போடும் போது என்ன என்ன ஆவணம் கொண்டு செல்ல வேண்டும் தெரியுமா ?

 

தேர்தலில் ஓட்டு போட செல்லும்போது கையில் என்னென்ன ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். வாக்காளர்கள் தங்களது அடையாளத்தை நிரூபிக்க என்ன மாதிரியான ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இது குறித்த விளக்கத்தை அளித்துள்ளார். வாக்குச்சாவடிக்கு ஓட்டு போட செல்லும்போது, வாக்காளர்கள் அனைவரும் தங்களது அடையாளத்தை நிரூபிக்க வாக்காளர் அடையாள அட்டையைக் கொண்டு செல்ல வேண்டியது அவசியம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்து, நீங்கள் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு சென்றால், எந்தவித சிரமமுமின்றி உடனடியாக வாக்களிக்கலாம். 

இருப்பினும் ஒரு சிலரிடம் வாக்காளர் அடையாள அட்டை இருக்காது, அல்லது அதை கொண்டு செல்ல மறந்திருப்பார்கள், அல்லது தொலைந்து போயிருக்கலாம். இது போன்ற சமயங்களில் வாக்காளர்கள் கவலைப்பட தேவையில்லை. வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருப்பதை உறுதி செய்துகொண்டாலே போதுமானது. வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிலாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள மாற்று அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை காண்பித்தும் நீங்கள் வாக்களிக்கலாம்.

தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 12 மாற்று ஆவணங்கள்

1. ஆதார் அட்டை (Aadhaar Card)
2. பான் அட்டை (PAN Card)
3. ஓட்டுநர் உரிமம் (Driving License)
4. இந்திய கடவுச்சீட்டு (Indian Passport)
5. புகைப்படம் ஒட்டப்பட்ட வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகம் (Bank/Post Office Passbook)
6. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட அட்டை (MGNREGA Job Card)
7. மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு (Health Insurance Smart Card)
8. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் (Pension Document with photo)
9. மத்திய/மாநில அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டை (Service Identity Card)
10. எம்.பி. / எம்.எல்.ஏ.-க்களுக்கான அதிகாரப்பூர்வ அடையாள அட்டை (Official ID for MPs/MLAs)
11. தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டின் கீழ் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு (Smart Card issued by RGI under NPR)
12. மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக அடையாள அட்டை (UDID Card)

மேற்கண்ட இந்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் அசல் பிரதியை எடுத்து சென்று வாக்காளர்கள் எளிதாக தங்களது வாக்கை செலுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.