×

இது தெரியுமா..? பத்திரம் பதிய வில்லங்க சான்று கட்டாயம்..!!

 

வீடு, மனை விற்பனை பத்திரங்களை, சார் - பதிவாளர் அலுவலகம் செல்லாமலேயே பத்திரப்பதிவு செய்யும் வசதி, தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது.

இது குறித்து, பதிவுத்துறை தலைவர் அருண்சுந்தர் தயாளன் பிறப்பித்த உத்தரவு: இந்த புதிய வசதியில் தாக்கலாகும் பத்திரங்களில், திருத்தம் அல்லது கூடுதல் விபரம் தேவை எனில், அதை சார் - பதிவாளர்கள் ஒரே நாளில் தெரிவிக்க வேண்டும்.

பத்திரத்தை பதிவுக்கு ஏற்காமல் நிராகரிக்கப்படும் நிலையில், உரிய காரணத்தை தவறாமல் தெரிவிக்க வேண்டும். திருத்தத்துக்கு திருப்பித் தரப்படும் பத்திரம், மீண்டும் தாக்கல் செய்யப்படும்போது, ஏற்கனவே செலுத்திய கட்டண விபரங்களை ஏற்க வேண்டும்.

அவசியமில்லாத காரணங்களை பயன்படுத்தி, பத்திரங்களை நிராகரிக்கக் கூடாது. பதிவான பத்திரம், ரசீதுகளில், 'டிஜிட்டல்' முறையில் சார் - பதிவாளர் கையெழுத்திட வேண்டும். 'ஆன்லைன்' முறையில் பத்திரத்தை தாக்கல் செய்யும்போது, அதற்கான வில்லங்க சான்றிதழை பதிவேற்றம் செய்வது கட்டாயம். போலி ஆவணங்கள் உருவாவதை தடுக்கும் வழிமுறைகளை, சார் - பதிவாளர்கள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.