ஒரு மாணவருக்கு காலை உண்வில் கிடைக்கும் ஊட்டச்சத்து எவ்வளவு தெரியுமா..?
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், பசியின்றி மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்து, கல்வியில் முழுமையான கவனம் செலுத்திடவும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதல்வர் விஜய் தலைமையில் கடந்த 15.06.2026 அன்று நடைபெற்ற சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தின்போது, காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு விரிவாக்கம் செய்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இத்திட்ட விரிவாக்கத்தின் மூலம், 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவியர்கள், கூடுதலாகப் பயன்பெறுவர். இதற்கென நடப்பு நிதியாண்டில் கூடுதலாக 217 கோடியே 63 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ஒட்டுமொத்தமாக 724 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 447 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகத்தாலும், இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளிலுள்ள 2,150 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தாலும் காலை உணவு வழங்கப்படும்.
ஊரகப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 12,857 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலமாக சுய உதவிக் குழு உறுப்பினர்களால் அந்தந்தப் பள்ளியிலேயே காலை உணவு தயாரித்து வழங்கப்படும்.
இந்நிலையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் விஜய், சென்னை திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார்.அப்போது மாணவர்களுக்கு முதல்வர் விஜய் சர்க்கரை பொங்கலை பரிமாறினார். அவர்களுடன் அமர்ந்து விஜய்யும் உணவு சாப்பிட்டார். அப்போது பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவர்களுக்கு ஏதாவது வேண்டுமா என கேட்டுக் கொண்டே இருந்தார்.
ஒவ்வொரு வகுப்பறையிலும் அவர் மாணவர்களை சாப்பிடுமாறு கூறிவிட்டு சென்றார். இந்த உணவு திட்டத்தில் என்ன மெனு என்பதை பார்க்கலாம். திங்கள்கிழமைகளில் உப்புமா, செவ்வாய்க்கிழமைகளில் கிச்சடி, புதன்கிழமைகளில் பொங்கல், வியாழக்கிழமை உப்புமா, வெள்ளிக்கிழமை இனிப்பு வகை என திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த உணவில் ஒரு மாணவருக்கு 294 கிலோ கலோரி ஆற்றல், 9.85 கிராம் புரதம், 5.91 கிராம் கொழுப்பு, 1.64 மில்லிகிராம் இரும்புச் சத்து, 20.41 மில்லிகிராம் கால்சியம் கிடைக்கும்.