×

இந்த சூப்பர் கிராமம் பற்றி தெரியுமா..?? இங்கு இளைஞர்கள் மது அருந்தினால் ரூ.5000 அபராதம்..!!

 

மது நாட்டிற்கும் வீட்டுக்கும் கேடு" என்ற பொன்மொழி வெறும் வாசகம் மட்டுமல்ல; அது எண்ணற்ற குடும்பங்களின் நிம்மதியைச் சீர்குலைக்கும் கசப்பான உண்மை. மதுப்பழக்கம் தனிமனித ஆரோக்கியத்தைக் கெடுப்பதுடன், கல்லீரல் பாதிப்பு, நரம்புத் தளர்ச்சி போன்ற தீவிர நோய்களுக்கும் வழிவகுக்கிறது. மேலும், போதையினால் ஏற்படும் குடும்பத் தகராறுகள், வீண் கடன்கள் மற்றும் சாலை விபத்துகள் ஆகியவை சமூக அமைதியையும் இளைஞர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்குகின்றன. இத்தகைய மதுவின் தீமைகளிலிருந்து தங்கள் கிராமத்தின் எதிர்கால தூண்களான இளைஞர்களைக் காக்கவும், ஊரின் அமைதியை நிலைநாட்டவும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு மீனவ கிராமம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், விழுந்தமாவடி மீனவ கிராமத்தில் ஊர் பஞ்சாயத்தார்கள், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் சார்பாக, “பொதுமக்கள் கவனத்திற்கு, மதுவை ஒழிப்போம், மக்களை காப்போம்” என்று வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பேனரில் எழுதியிருப்பதாவது: 

நமது கிராமத்தின் பொது அமைதி, இளைஞர்களின் நலன் பொதுசுகாதாரம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு 02.08.2026 முதல் ஊரில் திருமணம் ஆகாதவர்கள் (இளைஞர்கள்) மது அருந்த முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் திருமணம் ஆகாதவர்கள் மது அருந்துவதை ஆதாரத்துடன் நீரூபிக்கப்பட்டால் ரூ.5,000/- அபராதம் வசூலிக்கப்படும். இதனுடன் திருமணம் ஆனவர்கள் குடிபோதையில் வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ பிரச்சினைகள் ஏற்பட்டு நமது ஊருக்கு வரும் பட்சத்தில் ரூ.5,000/-அபராதம் வசூலிக்கப்படும். “இந்த நல்ல முயற்சிக்கு ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்”.

இன்றைய சரியான முடிவு நாளைய சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் மதுவை தவிர்போம், நம் எதிர்கால வாழ்கையையும், நம் சமூகத்தையும் பாதுகாப்போம்... ‘மதுவை ஒழிப்போம்! மக்களை காப்போம்!!” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. போதைப்பொருளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வரும் நிலையில், விழுந்தமாவடி ஊர் மக்களின் இத்தகைய முடிவு மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.