இந்த திட்டம் பற்றி தெரியுமா ? தமிழ்நாட்டில் மறுமணம் செய்யும் பெண்கள் அரசின் 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி பெறலாம்..!
முன்னாள் முதலமைச்சர் கலைஞர், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவி திட்டம் என்ற திட்டத்தை 1975-ஆம் ஆண்டு ஆரம்பித்தார். இந்தத் திட்டத்தில் கணவனை இழந்த பெண்ணிற்குமறுமண ஏற்பாடு செய்யப்பட்டால் இந்த திட்டத்தின்மூலம் நிதியுதவி பெற்று பயனடையலாம்.கடந்த 5 ஆண்டுகளில், அதாவது, 2021 முதல் 2025 வரை இத்திட்டத்துக்காக 117 லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு செலவழித்துள்ளது. மொத்தம் 130 பேர் பயனடைந்துள்ளனர் என அரசு அதிகார்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தில் பயன் பெற கணவனை இழந்த பெண்ணிற்கு 20 வயதிற்கு அதிகமாகவும், மணமகனுக்கு முதல் திருமணம் ஆகவும்,40 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பட்டதாரி அல்லாதவர்களுக்கு 25,000 ரூபாய் வழங்கப்படும். இதில் மின்னணு பரிமாற்ற சேவை மூலமாக ரூபாய் 15,000 தொகையும், மீதமுள்ள 10,000 ரூபாய் தேசிய சேமிப்பு பத்திரமாக (National Savings Certificate) வழங்கப்படும். இதனுடன் திருமாங்கல்யத்திற்காக 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படும்.
பட்டதாரிகள் மற்றும் பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு 50,000 ரூபாய் நிதியுதவி கொடுக்கப்படுகிறது. இதில் 30,000 ரூபாய் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும். மீதமுள்ள 20,000 ரூபாய் தேசிய சேமிப்பு பத்திரமாக வழங்கப்படும். இவர்களுக்கும் 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படும்.
உதவித்தொகைக்கான விண்ணப்பத்துடன் கைம்பெண் சான்று, மறுமணம் செய்ததற்கான திருமண அழைப்பிதழ், மணமகன், மனமகள் ஆகிய இருவரின் வயதுச் சான்றுகள், பள்ளி அல்லது கல்லூரி அல்லது பாலிடெக்னிக் மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் நகல் ஆகியவைகளை இணைத்து, திருமணம் முடிந்த நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் திருமண உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை மாவட்ட சமூகநல அலுவலர், அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.