×

வங்கி லாக்கரில் நகை வைப்பவரா? ₹1 கோடி நகை இருந்தாலும் ₹5 லட்சம் தான் கிடைக்கும்! 

 

வங்கி லாக்கரில் நாம் நகைகளை வைத்திருக்கும்போது, எதிர்பாராத விதமாக வங்கி திவாலானாலோ அல்லது நகைகள் மாயமானாலோ, அந்த நகைகளின் மதிப்பு எவ்வளவு கோடிகளாக இருந்தாலும் நமக்குக் காப்பீட்டுத் தொகையாக அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைக்கும். இது பலருக்கும் தெரியாத ஒரு கசப்பான உண்மை. ஆனால், இந்த இழப்பைத் தவிர்த்து நகைகளுக்கு முழு பாதுகாப்புப் பெற உண்டு என்பது பல பேருக்கு தெரியாது.

வங்கி லாக்கர் முறைக்கு மாற்றாக 'கோல்டு ஓவர் டிராஃப்ட் லோன்' (Gold Over Draft Loan) என்ற வசதியைப் பயன்படுத்தலாம்.இந்த முறையில் உங்கள் நகைகளை வங்கியில் ஒப்படைக்கும்போது, வங்கி அதன் சந்தை மதிப்பைத் துல்லியமாகக் கணக்கிட்டுப் பாதுகாப்பான இடத்தில் வைக்கும். இவ்வாறு செய்யும்போது, அந்த நகைகளுக்கான முழுப் பொறுப்பையும் வங்கியே ஏற்றுக்கொள்கிறது. இதனால் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் நகையின் முழு மதிப்பையும் நீங்கள் திரும்பப் பெற வழிவகை உண்டு.

இந்தத் திட்டத்தின்படி, உங்கள் நகையின் மதிப்பில் சுமார் 70 சதவீதத் தொகையை 'ஓவர் டிராஃப்ட்' வரம்பாக (Limit) வங்கி நிர்ணயம் செய்யும். இதற்காக நீங்கள் ஒரு குறிப்பிட்ட செயலாக்கக் கட்டணம் (Processing Fee) மற்றும் ஜிஎஸ்டி மட்டும் செலுத்தினால் போதும். உதாரணமாக, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை வைத்தால், உங்களுக்கு 35 லட்சம் ரூபாய் வரை கடன் வரம்பு கிடைக்கும். இந்தத் தொகையை நீங்கள் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

இத்திட்டத்தின் சிறப்பம்சமே வட்டி விகிதம்தான். உங்களுக்கு வழங்கப்பட்ட வரம்பிலிருந்து எவ்வளவு பணத்தை எடுத்துப் பயன்படுத்துகிறீர்களோ, அந்தத் தொகைக்கு மட்டுமே வட்டி செலுத்தினால் போதும். ஒருவேளை நீங்கள் அந்தப் பணத்தைத் தொடவே இல்லை என்றால், நீங்கள் ஒரு ரூபாய் கூட வட்டி செலுத்த வேண்டிய அவசியமில்லை. இது லாக்கர் வாடகை செலுத்துவதற்குப் பதிலாக, நகையை இலவசமாகவும் பாதுகாப்பாகவும் வங்கியில் வைப்பதற்குச் சமமாகும்.

அடுத்த சில மாதங்களுக்குத் தங்களுக்குத் தேவைப்படாத நகைகளைச் சேமிக்க விரும்புபவர்களுக்கு இந்த 'ஸ்மார்ட்' முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் அவசரக் காலத்திற்குப் பணமும் தயாராக இருக்கும், அதே சமயம் உங்கள் வாழ்நாள் சேமிப்பான தங்கத்திற்கும் வங்கியின் முழுப் பொறுப்பில் 100% பாதுகாப்பு கிடைக்கும். லாக்கர் முறையை விடப் பாதுகாப்பான இந்த முறையைத் தாராளமாகப் பரிசீலிக்கலாம் .