×

திருவிடந்தையில் இன்று திமுக மாநாடு - திமுக தேர்தல் பரப்புரை பாடல் இன்று வெளியாக வாய்ப்பு..! 

 

செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் இன்று (பிப்ரவரி 11, 2026) திமுக பூத் கமிட்டி மாநாடு நடைபெறுகிறது. இதில் சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களை சேர்ந்த பூத் கமிட்டி முகவர்கள் கலந்து கொள்கின்றனர். ”என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” என்ற பெயரில் திமுக இதனை முன்னெடுத்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவினர் எப்படி பணியாற்றுவது, பூத் கமிட்டி முகவர்கள் எவ்வாறு களத்தில் நிற்பது உள்ளிட்டவை குறித்து அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. இந்த மாநாடுகள் மூலம் ஒருவித நம்பிக்கையும், உற்சாகமும் கட்சியின் அடிமட்டம் வரை கடத்தப்பட்டு, 2026 தேர்தலில் திமுகவினர் சுறுசுறுப்பாக பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

திருவிடந்தை திமுக மாநாடு என்பது வடக்கு மண்டலத்தின் ஒரு பகுதியாகும். இந்த பகுதியை பொறுத்தவரை வன்னியர்களும், தலித்களும் அதிகம் இருக்கின்றனர். இவர்கள் மத்தியில் அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு செல்வாக்கு இருக்கிறது.திமுகவிற்கு வடக்கு மண்டலம் தான் பெரிதும் கைகொடுத்து வருகிறது. இந்த சூழலில் 2026 தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வாக்கு வங்கி அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தவெகவால் வடக்கு மண்டலத்தில் பெரிய அளவில் வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்று திமுக கருதுகிறது. எனவே தங்களின் வடக்கு மண்டல கோட்டையை பாதுகாக்கவும், உதயநிதி ஸ்டாலினை மாஸ் லீடராக முன்னிறுத்தவும் இன்றைய மாநாடு கைகொடுக்கும் என்று நம்புகின்றனர். திருவிடந்தை மாநாட்டில் திராவிட மாடல் திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் மகளிர் உரிமைத் தொகை முதல் புதிய தொழில் முதலீடுகள் வரை மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை புள்ளிவிவரங்கள் உடன் பட்டியலிட திட்டமிட்டுள்ளனர். 

மேலும் இந்த மாநாட்டில் 

திமுகவின் 15 கழக மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களைச் சேர்ந்த BLA2, BLC, BDA, BYA நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு . 

திமுகவின் தேர்தல் பரப்புரை பாடல் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவின் சாதனைகளை விளக்கும் வகையில் முதலமைச்சரின் சட்டமன்ற உரைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்படுகிறது.

தமிழ்நாட்டின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடபெற்று வரும் ’என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’கூட்டங்களின் அனுபவங்களை இன்று பகிர்ந்துகொள்கின்றனர்.

சென்னை மற்றும் விழுப்புரம் பொறுப்பாளர்கள்: ஆ. ராசா எம்.பி. மற்றும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

மாநாட்டிற்காக 10,00,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்ட திடல் அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டுத் திடலில் மினி கிளினிக், மருத்துவக் குழுக்கள், தீயணைப்புத் துறை பாதுகாப்பு, கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.