பொதுத்துறை நிறுவனங்களின் சீரழிவுக்கு திமுகவின் ஊழலே காரணம்..! - அன்புமணி ராமதாஸ் சாடல்..!
பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இந்தியாவில், 2022-23ஆம் ஆண்டில் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் அதிக இழப்பை சந்தித்த மூன்று மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்றும், உத்தரப்பிரதேசம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் எதிர்கொண்ட இழப்பு மட்டும் ரூ.16,048 கோடி என்றும் பதினாறாம் நிதி ஆணையத்தின் முதன்மை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் எந்த அளவுக்கு சீரழிக்கப்பட்டுள்ளன என்பதற்கு இது தான் சான்று ஆகும்.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 102 பொதுத்துறை நிறுவனங்களில் 100 நிறுவனங்கள் மட்டும் தான் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 54 நிறுவனங்கள் லாபத்திலும், 35 நிறுவனங்கள் நஷ்டத்திலும் இயங்கி வருகின்றன. இலாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை நினைத்து மகிழ்ச்சி அடைவதற்கு எதுவும் இல்லை. மது வணிகம் செய்யும் டாஸ்மாக், உழவர்களிடமிருந்து அடிமாட்டு விலைக்கு நிலங்களை பறித்து 1000%க்கும் மேல் அதிக விலைக்கு விற்பனை செய்யும் சிப்காட் போன்ற நிறுவனங்கள் தான் இலாபத்தில் இயங்கி வருகின்றன. இந்த 54 நிறுவனங்களும் சேர்ந்து 2022-23ஆம் ஆண்டில் ஈட்டிய இலாபம் வெறும் ரூ.2560 கோடி மட்டும் தான்.
அதே நேரத்தில் நஷ்டத்தில் இயங்கும் 35 நிறுவனங்கள் அதே ஆண்டில் ஏற்படுத்திய இழப்பு ரூ.16,048 கோடி ஆகும். அந்த ஆண்டில் மேலும் 11 நிறுவனங்களின் இழப்பு குறித்த முழுமையான தகவல்கள் நிதி ஆணையத்திற்கு அளிக்கப்படவில்லை. அந்தத் தொகையும் சேர்ந்திருந்தால், ரூ.18,814 கோடி இழப்புடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு, அந்த இடத்தைத் தமிழ்நாடு பிடித்திருக்கும்.
2022-23ஆம் ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தமிழக அரசு மானியமாக ரூ.26,867 கோடி வழங்கியது. அந்த மானியம் மட்டும் வழங்கப்படவில்லை என்றால், பொதுத்துறை நிறுவனங்களின் இழப்பு ரூ.52,915 கோடியாக அதிகரித்திருக்கும். அத்தகைய சூழலில் பொதுத்துறை நிறுவனங்கள் இழப்பில் ரூ.32,430 கோடியுடன் முதலிடத்தில் உள்ள உத்தரப்பிரதேசத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த இடத்தை தமிழகம் பிடித்திருக்கும்.
இழப்பை எதிர்கொண்ட நிறுவனங்களில் மிகவும் முக்கியமானது மின்சார வாரியம் ஆகும். 2022-23ஆம் ஆண்டில் மின்வாரியம் ரூ.9192 கோடி இழப்பை சந்தித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டான 2021-22ஆம் ஆண்டில் மின்சார வாரியத்தின் இழப்பு ரூ.9000 கோடி ஆகும். 2022-23ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வின் மூலம் 7 மாதங்களில் மட்டும் மின்வாரியத்திற்கு ரூ.23,863 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. அதன்படி 2022-23ஆம் ஆண்டில் மின்வாரியத்திற்கு குறைந்தது 14,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அதையும் தாண்டி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பு அதிகரித்திருக்கிறது என்றால் எந்த அளவுக்கு அந்த நிறுவனம் சீரழிந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 4 கட்டங்களாக இதுவரை ரூ.45,000 கோடிக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் வாயிலாக மட்டும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடந்த 4 ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் கோடிக்கும் அதிகமாக வருமானம் கிடைத்திருக்கிறது. ஆனாலும் மின்சார வாரியம் இன்னும் இழப்பில் தான் இயங்கி வருகிறது. இதற்குக் காரணம் திமுக ஆட்சியாளர்களின் ஊழல் தான்.
இந்தியாவிலேயே அதிக பொதுத்துறை நிறுவனங்களைக் கொண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான். ஒரு மாநிலம் அதன் அனைத்துத் தேவைகளுக்கும் வரி வருவாயை மட்டுமே நம்பிக் கொண்டிருக்க முடியாது. அதிலும் குறிப்பாக ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு மாநிலங்களின் வரிவிதிப்பு அதிகாரம் பறிக்கப்பட்டு விட்ட நிலையில், வரி அல்லாத வருவாயை மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும்.
மாநிலங்களின் வரி அல்லாத வருவாயைப் பெருக்குவதற்கான ஒரே வழி பொதுத்துறை நிறுவனங்களை இலாபத்தில் இயக்குவதும், கனிமவளங்கள் விற்பனையை முறைப்படுத்துவதன் மூலம் அதிக வருவாய் ஈட்டுவது தான். ஆனால், இரண்டிலுமே திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டது. ஆற்று மணல், கருங்கல் ஜல்லி போன்றவற்றின் மூலம் அதிக வருவாய் ஈட்ட முடியும் என்றாலும், அதில் நடைபெறும் வரலாறு காணாத ஊழல்கள் காரணமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் ஆட்சியாளர்களின் பைகளுக்கு செல்கின்றன. அதேபோல், பொதுத்துறை நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்குவதால் தமிழக அரசின் வரி அல்லாத மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
2025-26ஆம் ஆண்டில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பு ரூ.4 லட்சத்து, 30,434 கோடி ஆகும். ஆனால், தமிழக அரசின் வரி அல்லாத வருவாய் நடப்பாண்டில் வெறும் ரூ.28,818.58 கோடி மட்டும் தான். இது தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பில் வெறும் 6.69% மட்டும் தான். ஒரு மாநிலத்தின் நிதிநிலை வலிமையாக இருக்க வேண்டும் என்றால், அதன் மொத்த நிதிநிலை அறிக்கை மதிப்பில் 20% அளவுக்கு வரி அல்லாத வருவாய் இருக்க வேண்டும். ஆனால், திமுக அரசின் ஊழல்கள், நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிந்து விட்டதால், வரி அல்லாத வருவாய் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியதற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும். இதற்கு காரணமான திமுகவுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டப் போவது உறுதி”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.