×

சிங்கிள் டீ குடித்துவிட்டு பம்பரமாக வேலை செய்யும் திமுகவினர்..! 200+ தொகுதிகளில் வெற்றி என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சூளுரை!

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சென்னை, பெரம்பூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், "தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை எழுச்சியோடு கொண்டாடும் இந்த சிறப்பான நேரத்தில் உங்களை எல்லாம் சந்தித்து, பொங்கல் வாழ்த்துகளை தெரிவிக்கும் ஒரு நல்ல வாய்ப்பு எனக்கு முன்கூட்டியே கிடைத்திருக்கிறது.

முதலமைச்சராக என்ன தான் பல ஊர்களில் நடைபெறுகிற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் கொளத்தூர் தொகுதியில் ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால், அதில் ஒரு வேகமும், ஒரு எனர்ஜியும் எனக்குள் வந்து விடுகிறது. ஒவ்வொரு முறை இங்கு வரும் போதும் இதை நான் சொல்வதுண்டு.

பொங்கல் விழாவை இன்றைக்கு நாம் சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், என்னென்ன திட்டங்களையெல்லாம் செய்திருக்கிறது? என்னென்ன சாதனைகளையெல்லாம் புரிந்திருக்கிறது? என்பது உங்களுக்கு நான் எடுத்துச்சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால், நீங்கள் மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்காகத் தான் இந்த பொங்கல் விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே நீங்கள் தேர்தல் களத்தில் ஆற்ற வேண்டிய பணிகளில் 50 சதவிகிதம் முடித்துவிட்டீர்கள். இன்னும் 50 சதவிகிதம் தான் மீதம் இருக்கிறது. இன்றைக்கு பாஜக உட்பட பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்கள், திமுகவினர் போன்று யாராலும் வேலை செய்யமுடியாது என்று கூறுகின்றனர்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால், 1967-ல் பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்த போது அப்போது முன்னாள் முதலமைச்சராக இருந்த பெரியவர் பக்தவச்சலம் பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்த போது, “திமுக காரன் ஒரு சிங்கில் டீயை குடித்து விட்டு பம்பரமாக வேலை செய்வான். அதற்கு நாமெல்லாம் ஈடாக முடியாது” என்று வெளிப்படையாகவே சொன்னார். அதே உணர்வோடு இன்றைக்கும் நான் பார்க்கிறேன்.

200 தொகுதிகளுக்கு குறையாமல் நம்முடைய கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று ஏற்கனவே கூறியிருந்தேன். நீங்கள் ஆற்றக்கூடிய பணிகளை பார்க்கும் போது 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது. அந்த நம்பிக்கையோடு பொங்கல் விழாவை நாம் கொண்டாடுவோம். வரவிருக்கும் தேர்தலில் ஒரு மாபெரும் வெற்றி பெறுவதற்கு உறுதியெடுப்போம்” என்று தொண்டர்களை உற்சாகமூட்டினார்.