“சர்க்கஸ் கும்பலிடம் தமிழ்நாடு சிக்கிக்கொண்டது”- உதயநிதி ஸ்டாலின்
தாங்கள் ஆட்சிக்கு வந்துட்டோம் என்பதையே தவெகவினர் இன்னும் நம்பவில்லை.. எதற்கெடுத்தாலும் முந்தையை ஆட்சி மீது பழி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கரங்களை மென்மேலும் வலுப்படுத்துவோம்... என்றும் களத்தில் நின்று தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்திடுவோம்! திமுகவுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இருக்கும் உறவு, இன்று நேற்று உருவானது அல்ல. மறைந்த கண்ணியமிகு காயிதே மில்லத் காலத்தில் உருவான உறவு. இந்த உறவு நாளுக்கு நாள் வலிமையாகி கொண்டே போகிறது.
இன்றைக்கு தமிழ்நாடு என்ன நிலைமையில் இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். திராவிட மாடல் ஆட்சியில் நல்ல நிலையில் இருந்த தமிழ்நாடு, தற்போது சர்க்கஸ் கும்பலிடம் மாட்டிக்கொண்டுள்ளது. சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பது மக்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. நம் கழகத் தலைவர் பேசுகையில், “ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டி.. ஒன்னு மின்வெட்டு.. இன்னொன்னு அரிவாள் வெட்டு.." என்று கூறியது போல் தற்போது தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டில் இன்றைக்கு மின்வெட்டு உச்சத்தில் உள்ளது. முதலமைச்சரின் பெரம்பூர் தொகுதியிலேயே மின்வெட்டு அதிகமாக இருப்பதால், தினமும் மக்கள் குடும்பம் குடும்பமாக வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். ஆட்சிக்கு வந்து 4 மாதங்கள் ஆகி விட்டபோதிலும், இதுவரை ஒரு திட்டத்தை கூட முழுதாக நிறைவேற்றவில்லை. சட்டப்பேரவையில் இன்னும் Dance-ம், Fight சீனும் தான் போடவில்லை. தாங்கள் ஆட்சிக்கு வந்துட்டோம் என்பதையே தவெகவினர் இன்னும் நம்பவில்லை.. எதற்கெடுத்தாலும் முந்தையை ஆட்சி மீது பழி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.” என்றார்.