NEET-க்கு எதிரான TVK அரசு அனிதாவின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு கூட அனுமதி தராதது ஏன்? - உதயநிதி
அனிதாவின் நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு மற்றும் அனிதாவின் குடும்பத்தினர் சார்பில் சென்னை பெசண்ட் நகரில் நினைவேந்தல் கூட்டம் நடத்த அனுமதி மறுப்பது ஏன்? என எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “நீட் கொடுமையால் இந்தியாவில் நிகழ்ந்த முதல் மரணம் தங்கை அனிதாவினுடையது. அனிதா உயிரிழந்தபோது முதலமைச்சர் விஜயும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் அவரது இல்லத்திற்குச் சென்று துக்கம் அனுசரித்தனர். நீட்டை ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகக் கூறும் த.வெ.க. அரசு, ஜனநாயக வழியில் அமைதியாக நடைபெறவிருந்த அனிதாவின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்தது ஏன்? இதற்கு அரசு விளக்கம் அளிப்பதுடன், உடனடியாக அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும். பெசன்ட் நகர் மாதா கோயில் கொடியேற்றத்தை காரணம் காட்டி அனிதாவின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. ஆனால், அங்கு அந்த அளவில் கூட்டம் இல்லை. உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். அல்லது மாற்று இடத்தை கொடுக்க வேண்டும்.
அறிவியல் கல்லூரிக்கு விளையாட்டு அரங்கம் வேண்டும் என்பது தான் உறுப்பினரின் கோரிக்கை, உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதனின் பதில் எப்படி இருக்கிறது என்றால், அவசரப்பட்டு யாரும் என்னிடம் கோரிக்கை வைத்து விடாதீர்கள், யோசித்து கேள்வி கேளுங்கள் என்பது போல் இருக்கிறது” என்றார்.