“நிர்வாக திறனற்ற டம்மி CM, ஜோக்கர் அமைச்சர்கள்”- வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்
இந்த ஆட்சி அமைந்ததில் இருந்து அதிக ஏமாற்றங்களை சந்திப்பது விவசாயிகள்தான். 'விவசாயி' ஆக அடுத்த ஜென்மம் வரை எதற்கு காத்திருக்க வேண்டும்? இந்த ஜென்மமே போதுமே என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தஞ்சையில் நடைபெற்ற காவிரி விவகாரம் தொடர்பான திமுகவின் ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டிற்கு 42 TMC தண்ணீர் வந்திருக்கணும் ஆனால் ஒரு சொட்டு தண்ணீர் கூட வரல.. ஆட்சி அமைத்து 3 மாசம் ஆகுது இதுவரைக்கும் பாஜக என்ற வார்த்தை முதலமைச்சர் வாயிலிருந்து வந்ததில்லை. இந்த ஆட்சி அமைந்ததில் இருந்து அதிக ஏமாற்றங்களை சந்திப்பது விவசாயிகள்தான். 'விவசாயி' ஆக அடுத்த ஜென்மம் வரை எதற்கு காத்திருக்க வேண்டும்? இந்த ஜென்மமே போதுமே! ஊரான் வீட்டு நெய்யில அவர் வீட்டுக்கு ஸ்வீட் செய்யுறாரு.. நம்ம தலைவர் கொண்டுவந்த மெட்ரோ டிரெயின்ல போய் ரீல்ஸ் எடுக்கிறார். தற்போது இருக்கும் நிர்வாகத் திறனற்ற டம்மி முதலமைச்சரால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
பயிர் கடன் தள்ளுபடி வாக்குறுதியை தவெக அரசு மீறிவிட்டது. தற்போது ரூ.35 ஆயிரம் வரை தான் பயிர் கடன் தள்ளுபடி செய்கின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியவர் முதலமைச்சர். மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுப்போம் என்றதும் ஆட்சியாளர்கள் பயந்து விட்டனர். மொத்த ஜோக்கர் கூட்டமாக தமிழக அமைச்சரவை அமைந்துள்ளது. கழிவறையை கூட விடாமல் ரீல்ஸ் எடுத்து போட்டு கொண்டிருக்கின்றனர். ரீல்ஸ் போடும் ஒரு அரசை இந்தியாவே இதுவரை கண்டது இல்லை. அமைச்சர்கள் மட்டுமல்லாமல் அவர்களின் உறவினர்களும் ஆய்வுக்கு செல்கின்றனர். திமுக மக்கள் மன்றத்தில் மட்டுமல்லாமல் நீதிமன்றத்திலும் சட்டப்போராட்டத்தை தொடங்கி உள்ளது.
இங்கு தமிழ்நாட்டில் ஆட்சி நடத்துவதற்கு காங்கிரசின் தயவு வேண்டும். அதனால் கர்நாடகா காங்கிரஸ் அரசை கேள்வி கேட்க துப்பில்லை. ஆட்சி அமைத்து 3 மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரைக்கும் அவர் வாயில் இருந்து பாஜக என்ற வார்த்தை வந்ததே கிடையாது. அவ்வளவு பெரிய தைரியசாலி. நேற்று டெல்லியில் போராட சென்ற நம்முடைய விவசாயிகளை மகாராஷ்டிரா அரசின் காவல்துறை நாக்பூரில் அவர்களை வழி மறித்து பாதியிலேயே தமிழ்நாட்டிற்கு போக சொல்லிவிட்டார்கள். ஆனால், இதை பற்றி முதலமைச்சர் வாய் திறக்கவில்லை. ஏனென்றால் மகாராஷ்டிராவில் நடப்பது பாஜக ஆட்சி. பாஜகவை எதிர்த்து பேசுவதற்கு துப்பில்லை, திராணியில்லை. விவசாயிகளின் உரிமையை விட முதல்வருக்கு தன்னுடைய ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய சுயநலம்” என்றார்.