“எம்.எல்.ஏக்களை SOFA கொடுத்து வாங்குவதே 24 மணிநேர வேலை”- உதயநிதி
அதிமுகவினருக்கு சோபா கொடுத்து தமிழக வெற்றி கழகத்தினர் ஆட்களை பிடிக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
பாளையங்கோட்டை சிறையில் உள்ள திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “சட்டமன்ற உறுப்பினர்களை SOFA கொடுத்து வாங்குவதையே 24 மணிநேர வேலையாக தவெக அரசு செய்கிறது. முழு நேரமாக குதிரை பேர வேலையைத்தான் தவெக அரசு செய்துவருகிறது. பழிவாங்கும் செயலில் தான் தவெக அரசு ஈடுபட்டுவருகிறது. தவெக அரசு மீது அவர்களது கட்சி நிர்வாகிகளே புகார் கூறுகின்றனர். தவெக நிர்வாகிகள் மீது அவங்க கட்சிக்காரங்களே கொடுத்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. மக்களுக்கான ஆட்சியை நடத்தாமல், திமுகவை முடக்குவதிலும் எம்.எல்.ஏ க்களை ஆஃபர் கொடுத்து வாங்குவதிலும் தான் இந்த சோபா மாடல் அரசு 24 மணி நேரமும் பிஸியாக இருக்கிறது.
மிசா - எமர்ஜன்சியை பார்த்தது தி.மு.கழகம். தத்தித்தாவி ஆட்சிக்கு வந்து தறிகெட்டு அரசு நடத்தும் Sofa அரசின் கைது நடவடிக்கைகளுக்கு எல்லாம் கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார்கள். விமர்சனத்துக்காக செய்யப்படும் ஒவ்வொரு கைதின்போதும் நீதிமன்றத்திடம் குட்டுப்படும் இந்த ஆட்சியாளர்கள் மக்கள் மன்றத்திலும் சரிவை சந்திப்பது உறுதி” என்றார்.