உதயநிதி பேசிக்கொண்டிருக்கும் போது ‘போட்டோ, போட்டோ’ எனக் கத்திய தொண்டர்கள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மகாலிங்கத்தை ஆதரித்து கீழரதவீதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கீழரதவிதி தேரடி அருகே பிரச்சாரம் மேற்கொண்ட தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தமிழக அரசின் சார்பில் செய்யப்பட்டுள்ள நலத்திட்டங்களான புதிய பேருந்து நிலையம், தேர் ஓடும் நான்கு ரத வீதிகளில் அண்டர்கிரவுண்ட் EB கேபில் மற்றும் ஆண்டாள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பார்க்கிங் வசதி உள்ளிட்ட அனேக விஷயங்களை எடுத்துரைத்து பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து கூட்டத்தில் இருந்தவர்கள் போட்டோ போட்டோ என்று கேட்டவுடன் எடப்பாடி பழனிச்சாமி சசிகலா காலில் விழுந்த போட்டோ எடுத்து காண்பித்து போட்டோவை நீங்க கேட்கிறீர்கள், ஆனால் எடப்பாடி பழனிச்சாமி என்னை திட்டுகிறார், என்றும் எனக்கு எந்த அனுபவமும் இல்லை என்று கூறிவரும் எதிர்க்கட்சித் தலைவரின் காலில் விழும் அனுபவம் தமக்கு எப்பவுமே இருந்ததில்லை என்றும் கூறினார். மேலும் அவர் தமிழகத்திற்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் செய்துள்ள திட்டங்களான காலை உணவு திட்டம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குதல் உள்ளிட்ட விஷயங்களை மேற்கோள் காட்டி வாக்கு சேகரித்தார். முன்னதாக மகாலிங்கத்திற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த ஆம்புலன்ஸ் சத்தத்தை கேட்டு தனது பரப்புரையை நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழி வருமாறு பொதுமக்களிடையே கேட்டுக்கொண்டார்.