×

"இன்ஸ்டாவில் ரீல்ஸ் எடுக்கும் போராளிகளைத்தான் இன்று சமூகம் கொண்டாடுகிறது"- உதயநிதி ஸ்டாலின்

 

தமிழ் மொழி உரிமையையும், தமிழ்நாட்டு உரிமையையும் பாதுகாக்க திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் என்றும் ஓரணியில் கைகோர்த்து நிற்கும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஐயாவின் உருவச்சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்தார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தமிழ், தமிழ்நாட்டு உரிமைகளை பாதுகாக்க திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் என்றைக்கும் ஓரணியில் கைகோர்த்து களத்தில் நிற்கும். பெரியாரை சந்திக்காவிட்டால் கலைஞர் கம்யூனிஸ்ட் ஆகியிருப்பார். களப் போராளிகளை கொண்டாடுவதை விட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போராளிகளைதான் கொண்டாடுகிறார்கள். என்று நீட் வந்ததோ அன்றிலிருந்தே திமுக எதிர்க்கிறது... நீட் போராட்டம் தமிழகத்திற்கு புதிதல்ல. பல்வேறு நீட் ஒழிப்பு போராட்டங்களை திமுக நடத்தி உள்ளது. போராடினால் எதுவும் கிடைக்கும் என உறுதியாக நம்பியவர் ஐயா நல்லகண்ணு.. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் சமீபத்தில் டெல்லியில் நடந்த நீட் முறைகேடு போராட்டம். டெல்லியில் நடைபெற்ற போராட்டம் முடிவல்ல, தொடக்க மட்டுமே. நீட் தேர்வை ஒழிக்கும் வரை போராட்டம் தொடரும்.

நீட் தேர்வுக்கு எதிராக திமுக தொடர்ந்து போராடி வருகிறது. நீட் விலக்கு கோரி இயற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. மசோதாவுக்கு ஒப்புதல் கோரி நீதிமன்றம் வரை சென்று போராடியவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 2016-ஆம் ஆண்டு திமுக வெற்றி வாய்ப்பை இழந்த போதும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, “திமுக ஆட்சியை இழந்ததை விட, தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக கம்யூனிஸ்ட்டுகள் இல்லாத சட்டப்பேரவை அமைந்திருக்கிறது. அதுதான் எனக்கு வருத்தம்” என தெரிவித்தார். அந்தளவுக்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது கலைஞர் அவர்களுக்கு தனிப்பாசம் இருந்தது. நல்லகண்ணு அவர்களுக்கு தமிழ்நாட்டின் உயரிய விருதான ‘தகைசால் தமிழர்' விருது வழங்கிப் பெருமைப்படுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். நான் முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றபோது முதல் நபராக வாழ்த்துப் பெற்றது தோழர் நல்லகண்ணுவிடம் தான். நிறைய அரசியல் பேசி, அறிவுரைகளை எனக்கு வழங்கியுள்ளார் நல்லகண்ணு அவர்கள்” என்றார்.