தமிழ்நாடு கல்விக்கு பாஜக அரசு ஒரு ரூபாய் நிதி கூட ஒதுக்கவில்லை- உதயநிதி ஸ்டாலின்
200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவள்ளூர் பாரிவாக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் மார்பளவு வெண்கல சிலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “திமுக தலைவராக பதவி ஏற்ற பின்பு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு, தமிழ்நாட்டு மக்கள் நம் முதலமைச்சர் மீது வைத்துள்ள அளவுகடந்த நம்பிக்கைதான் காரணம். அதேபோல் 2026 தேர்தலிலும் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெறும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார். மருத்துவர்களின் சிகிச்சை மற்றும் தமிழ்நாட்டு மக்களின் அன்பினாலும் ஓரிரு நாட்களில் வீடு திரும்ப உள்ளார்.
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மூலம் நாள்தோறும் சுமார் 18 லட்சம் பள்ளி குழந்தைகள் பயன்பெறுகிறார்கள். இதனால் பள்ளி வரும் குழந்தைகளுக்கு முதலில் தரமான காலை உணவு, பிறகு தரமான கல்வி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாடு அரசுக்கும், மக்களுக்கும் பாஜக அரசு தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை உண்டாக்கி வருகிறது. நிதியுரிமை, கல்வியுரிமை வரிசையில் இப்போது மொழி உரிமையையும் பறிக்க திட்டமிட்டு வருகிறார்கள். கடந்த கல்வியாண்டில், தமிழ்நாடு கல்விக்கு ஒன்றிய அரசு ஒரு ரூபாய் நிதி கூட ஒதுக்கவில்லை” என்றார்.