×

மெரினாவில் காமராஜருக்கு கருணாநிதி இடம் தரவில்லையா? - தங்கம் தென்னரசு விளக்கம்

 

காமராஜருக்கு சென்னை மெரினாவில் இடம் மறுக்கப்பட்டதாக தாரகை கத்பட் கூறியது தவறு என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் விளக்கம் அளித்தார்.

சட்டப்பேரவையில் பேசிய காங் சட்டமன்ற குழு தலைவர் தாரகை கத்பட், “காமராஜர் மறைந்தபோது அவரை நல்லடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடம் கேட்டோம். கிடைக்கவில்லை. அப்போது அதை தாங்கிக்கொண்டு சிரித்த முகத்தோடு சென்றோம்” என்றார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, “1975 ஆம் ஆண்டு காமராஜர் மறைந்த செய்தி கேட்டவுடன் கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கிருந்த காங்கிரஸ் தலைவர்கள் காமராஜரின் உடலை தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் மைதானத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று விவாதித்தார்கள். அந்த சமயத்தில் காமராஜர் வெறும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மட்டும் கிடையாது, தேசிய தலைவர். அவரை உரிய முறையில் அடக்கம் செய்து நினைவிடம் கட்ட வேண்டும் என்று அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி தெரிவித்தார். தேசிய தலைவரான காமராஜருக்கு உரிய முறையில் அடக்கம் செய்து நினைவிடம் கட்ட வலியுறுத்தினார். அன்று தலைவராக இருந்த பழ.நெடுமாறனும், காமராஜரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வது குறித்த கோரிக்கைகள் எதுவும் வைக்கப்படவில்லை. அகவே கிண்டியில் காந்தியடிகளின் நினைவு மண்டபத்திற்கு அருகில் காமராஜர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. காமராஜர் வாழ்நாளில் காந்தியக் கொள்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றியவர் என்பதால், அவரது உடலை காந்தி மண்டப வளாகத்திலேயே அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய காங்கிரஸ் தலைவர்களே முழு மனதுடன் ஒப்புக்கொண்டனர்.

பெருந்தலைவர் காமராஜர் மறைந்தபோது சிலர் ராஜாஜி அரங்கிற்கு காமராஜரின் உடலை கொண்டு செல்ல வேண்டும் என பேசிக்கொண்டிருந்த போது, திடீரென காமராஜரின் இல்லத்திற்குள் வந்த முதலமைச்சர் கலைஞர் “காமராஜர் உடலை உடனடியாக ராஜாஜி அரங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும்" என்று நாங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு ஏதோ கனவு கண்டதைப்போல சொன்னார்கள். அன்று இரவே மழையில் அந்த இடத்தை தயார் செய்து, இரவெல்லாம் தூக்கமில்லாமல் அங்கேயே இருந்து ஏற்பாடுகளை செய்தார். கட்சியைப் பற்றி நான் எண்ணவில்லை. ஆனால், என்னைப் பொறுத்தமட்டில் நான் உள்ளளவும் இதனை மறக்க முடியாது” என்றார்.