“மாற்றம் இல்லை ஏமாற்றம்! பட்டாசு தொழிலை அடியோடு நசுக்க முயற்சி”- தங்கம் தென்னரசு
ஆய்வு என்ற பெயரில் சிவகாசி பட்டாசுத் தொழிலை தவெக அரசு நசுக்கப் பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
சிவகாசியில் பட்டாசு தொழிலைப் பாதுகாக்க வலியுறுத்தியும், தவெக அரசின் விரோதப் போக்கை கண்டித்தும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, “சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகளில் கவனக்குறைவால் நடைபெறும் விபத்துக்கான காரணம் காட்டி, இந்த தொழிலையே முடக்க தவெக அரசு முயற்சிப்பது எந்த வகையில் நியாயம்? சட்டவிரோதமாக உரிமம் இல்லாமல் நடக்கும் பட்டாசு தொழிற்சாலை நடத்தினால் அதன்மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் தீப ஒளி திருநாள் நெருங்கும் நேரத்தில் முறை்ான அனுமதி பெற்று நடக்கும் தொழிற்சாலைகளை முடக்க நினைப்பது கண்டிக்கதக்கது.
தவெக அரசு பொறுப்பேற்று 3 மாதத்தில் சிவகாசி பட்டாசு தொழிலை அடியோடு நசுக்க முயற்சிக்கிறது. பட்டாசுத் தொழில், தீப்பெட்டி தொழில் முடங்கினால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படும் என்பதனை தவெக அரசு உணர வேண்டும். மாற்றம் தருவோம் என கூறி ஆட்சிக்கு வந்த தவெக, பயிர்க்கடனை தள்ளுபடி செய்வோம் என தேர்தல் வாக்குறுதி அளித்த தவெக, நிதி நிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான நிதியையே குறைத்துவிட்டது. ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்திற்காக திமுக அரசு ஒதுக்கிய நிதியையும் தவெக அரசு பறித்துவிட்டது.” என்றார்.