வாக்களிக்க செல்லாதது ஏன்?- செந்தில் பாலாஜி விளக்கம்
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி டிரான்ஸ்பார்மர் கொள்முதல் புகார் தொடர்பாக விளக்கம் அளித்தார்.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்பாலாஜி, “மின் மாற்றிகள் கொள்முதல் செய்ததில் தவறுகள் நடந்திருக்கிறது என்று ஒரு அமைப்பு புகார் தெரிவித்திருக்கிறது. டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. தமிழ்நாடு அரசுக்கு எந்த இழப்பீடும் ஏற்படவில்லை. டான்ஜெட்கோவில் டெண்டர்களை பிரித்து கொடுப்பது என்பதுதான் வழக்கம். அதிமுக ஆட்சியிலும் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதே
நடைமுறைதான் தற்போதும் பின்பற்றப்படுகிறது. நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக தான் வரும். கரூரில் 41 பேர் உயிரிழந்தபோது நான் தான் மருத்துவமனையில் பணி செய்தேன். 41 பேர் இறந்துபோனப்ப விட்டுட்டு ஓடிப்போனவங்கள பத்தி பேசி நேரத்த வீணடிக்க வேண்டாம்.
வாக்குப்பதிவு நாளன்று கோவையில் நான் போட்டியிட்ட தொகுதியில் ஒவ்வொரு பூத்தாக சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டேன். ஒரு சில இடங்களில் பூத் உள்ளேயே அதிமுகவினர் இருந்தனர். ஏஜெண்ட் இல்லாத சிலரும் பூத்துக்கு உள்ளேயே இருந்தனர். நாங்கள் அவர்களை வெளியேற்ற முயற்சித்தபோது அவர்கள் பிரச்சனை உருவாக்க முயன்றனர். மறியல் செய்தனர். கடைசி 2 மணிநேரங்களில் பரபரப்பான சூழல் இருந்ததால்தான் என்னால் கரூருக்கு வாக்களிக்க செல்லமுடியவில்லை. நான் போட்டியிடும் தொகுதியில் எந்தவொரு பதட்டமும் ஏற்படக்கூடாது என்பதாலேயே அந்த இடத்தைவிட்டு நான் நகரவில்லை” என்றார்.