“கொளத்தூரில் கொத்து பரோட்டா என கீழ்த்தரமா பேசுறார்... நாங்களும் பேச வேண்டிய நிலைக்கு வந்துவிடுவோம்”- ஆர்.எஸ்.பாரதி
தவெக குதிரை பேர அரசியலில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிடில் நீதிமன்றத்தை நாடுவோம் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தமிழக முதலமைச்சர் விஜய் தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே கரூர் சம்பவம் குறித்து முதலமைச்சர் பேசியது தொடர்பாக புகார் அளித்துள்ளோம். குதிரை பேரம் தொடர்பாக கடந்த 4-ம் தேதி ஆளுநரை சந்தித்து புகார் அளித்தோம். குதிரை பேர புகார் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நீதிமன்றத்தை நாடுவோம். கரூர் முதலமைச்சர் விஜய் பேச்சு உண்மைக்கு மாறாகவும், கரூர் வழக்கை பாதிக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது என்பதை தெளிவாக சிபிஐ இடமும் கரூர் வழக்கை கண்காணிக்கும் நீதிபதியிடமும் மனுவாக அளித்துள்ளோம்.
கட்சி மாறுமாறு தவெகவினர் தன்னை அணுகியதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதன் அடிப்படையில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதுதான் குதிரை பேரம் நடந்ததற்கான ஆதாரங்கள். கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டு விட்டதாக கீழ் தரமாக பேசுகிறார். இதுபோன்று முதல்வர் விஜய் பேச ஆரம்பித்தால்.. நாங்களும் பேச வேண்டிய நிலைக்கு வந்துவிடுவோம். இப்படி தான் போன எலக்ஷன்ல ஒரு செத்த பாம்பை போட்டு அடிச்சிட்டு இருந்தோம் அந்த கேப்புல ஒரு கருநாகம் உள்ள பூந்துடுச்சு... அந்த தப்ப திரும்ப செய்ய மாட்டோம். வைகோ மீது சதி உள்ளிட்ட குற்ற வழக்குகளை பதிவு செய்ய வேண்டும்” என்றார்.