“இதன் பிறகாவது பாஜக திருந்தி இதுபோன்ற குள்ளநரித்தனத்தை கைவிட வேண்டும்”- ஆர்.எஸ்.பாரதி
மக்களவையில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா தோல்வியடைந்தது குறித்து திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடம் செய்தி தொடர்பு துறை தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன், சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, உள்ளிட்டோர் இருந்தனர்.
ஆர் எஸ் பாரதி பேசும்போது, “திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வஞ்சகமான குள்ளநரித்தனமான மோடி அரசால் கொண்டுவரப்பட்ட தொகுதி வரையறை மசோதாவை முறியடித்து காட்டியுள்ளார். நேற்று இந்த மசோதா தாக்கல் செய்யும் போது, இது தமிழ்நாட்டிற்கும் தென்னக மக்களுக்கும் செய்யப்படுகின்ற துரோகம், எனவே எங்களுடைய கண்டனத்தை தெரிவிக்கிறோம் என அனைவரும் தங்களுடைய இல்லங்களில் கருப்பு கொடி ஏற்றி, கருப்பு சட்டை அணிய வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழகத்தில் எங்கும் கருப்பு சட்டையும் கருப்பு கொடியும் காணப்பட்டது. இன்று அந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில், திராவிட முன்னேற்ற தலைவர் எடுத்த முடிவுக்கு மகத்தான வெற்றி கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டிலும், மேற்கு வங்கத்திலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் இந்த வேளையில் எப்படியாவது மசோதாவை நிறைவேற்றி விடலாம் என மோடியும் அமித்ஷாவும் கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கினார்கள், 2 மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறுவதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள், நாடாளுமன்றத்திற்கு வர இயலாது எனவே எளிதில் இதனை நிறைவேற்றி விடலாம் என்று நினைத்தார்கள்,.
தமிழ்நாட்டின் உரிமை தான் முக்கியம், தமிழ்நாடு மக்களின் வாழ்க்கை தான் முக்கியம் என்பதை பிரதானமாக எடுத்துக் கொண்டு, தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஆஜரானார்கள். தமிழ்நாட்டின் 40 எம்பிக்களும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் எம்.பிக்கள் 29 என மொத்தம் 69 எம்.பிக்கள் செல்லாமல் இருந்தால் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கும். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்கின்ற வகையில் நமது முதலமைச்சர் எடுத்த முடிவு மகத்தான வெற்றி பெற்றுள்ளது, மோடியின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது. மேலும், இதன் பிறகாவது பாஜக திருந்தி இதுபோன்ற குள்ளநரித்தனத்தை கைவிட வேண்டும். நாளைய தினம் திராவிட முன்னேற்ற கழகத் தோழர்கள் இதனை வெற்றி விழாவாக கொண்டாட உள்ளனர். அப்போது பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் முதலமைச்சருக்கு நன்றி சொல்லும் விதமாக நாங்கள் ஒரு விழாவாக கொண்டாட உள்ளது.
அன்புமணி தான் நெ.1 தேச துரோகி, சி.ஏ.ஏ சட்டம் இயற்றும்போது நானும் இளங்கோவன் அதனை எதிர்த்து நின்றோம், அன்புமணியால்தான் சிஏஏ சட்டம் நிறைவேற்றப்பட்டது, இதற்கு ஆதரவாக 124 ஓட்டுகள் விழுந்துள்ளது, எதிர்ப்பாக 99 ஓட்டுகள் விழுந்தது, 13 நபர்கள் அதிமுக கூட்டணியில் இருந்தார்கள்,தமிழ்நாட்டில் இருந்த எடப்பாடி கட்சியும், அன்புமணியும், ஜி.கே.வாசனும் சேர்ந்து 13 ஓட்டுகள் இதற்கு ஆதரவாக அளித்தார்கள், இவர்களின் 13 வாக்குகள் எங்கள் பக்கம் விழுந்து இருந்தால் சி ஏ ஏ மசோதா தோற்கடிக்கப்பட்டிருக்கும். நாடு முழுவதும் வாழ்கின்ற இஸ்லாமியர், இலங்கை தமிழர்க்கும் துரோகத்தை இழைத்த ஓட்டு அன்புமணியின் ஒரு ஓட்டு தான். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பெறப்போகும் வெற்றிக்கு இது ஒரு அச்சாரம்” என்றார்.