"வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்” - தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம்
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் டிஜிபிக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், தமிழ்நாட்டில் நாளை வாக்கு எண்ணிக்கையை சீர்குலைத்து, சட்டம், ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட பாஜகவும், சில கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. இதனை முறியடிக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் அரசியல் கட்சி அலுவலகங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்” என்றார்.
முன்னதாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “நடத்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி ஆகிவிட்டது. அனைத்து தரப்பு மக்களும் தளபதி தான் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க போகிறார் என்ற கருத்து தெரிவித்து வருகிறார்கள். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஏதேனும் வாக்கு எண்ணும் மையத்தில் திட்டமிட்டு ஏதேனும் செய்ய உள்ளார்கள் என்ற சமூக ஊடகங்களில் வருகிற செய்தியை அடிப்படையாக கொண்டு வரும் சந்தேங்களின் அடிப்படையில் எந்த புகார் வந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம். புகார் வரும் போது நடவடிக்கை எடுக்கிறன் என கூறுவார்கள் ஆனால் மாலை வரை எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள் அதனால் தான் முன்கூட்டியே கடிதம் எழுதி உள்ளோம். இரண்டு ஆண்டுகளாக SIR உள்ளிட்ட பல பணிகளில் திமுக கூட்டணிகள் இணைந்து சிறப்பாக பணியாற்றி உள்ளார்கள். அதனை கெடுக்கும் நோக்கில் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்வார்கள் எனவும் தேர்தல் ஆணையம் பாஜகவின் B டீமாக செயல்படுகிறது. திமுக எதையும் சந்திக்க தயாராக உள்ளது. பொதுவாக வாக்கு எண்ணும் மையங்களில் எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் வர கூடாது என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம்” என தெரிவித்தார்.