“இதென்ன ரெய்டு, இதைவிட மோசமான ரெய்டுகளை எல்லாம் பார்த்தவர்கள் நாங்கள்”- ஆர்.எஸ்.பாரதி
இதென்ன ரெய்டு, இதைவிட மோசமான ரெய்டுகளை எல்லாம் பார்த்தவர்கள் நாங்கள். பத்தோடு பதினொன்று அவ்வளவு தான் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தவெக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது. இதற்கெல்லாம் பொறுப்பேற்காத தவெக, எதெற்கெடுத்தாலும் திமுக மீதே பழியை சுமத்தி ஒவ்வொரு விஷயத்தையும் திசைதிருப்பி வருகிறது. அதோடு எதிர்க்கட்சியினர் மீது காவல்துறையை வைத்து அடக்குமுறையை கையாள்கிறது இந்த அரசு. தவெக அரசின் மீதான மக்களின் எதிர்ப்பை, அதிருப்தியை திசை திருப்பவே எதிர்க்கட்சியினர் மீது ரெய்டு நாடகம் அரங்கேற்றப்படுகிறது.
இதென்ன ரெய்டு, இதைவிட மோசமான ரெய்டுகளை எல்லாம் பார்த்தவர்கள் நாங்கள். பத்தோடு பதினொன்று அவ்வளவு தான். 50 வருடங்களாகப் பல்வேறு ரெய்டுகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்பதுதான் வரலாறு. இது எங்களுக்கு 50-உடன் 51-ஆவது ரெய்டு, அவ்வளவுதான். எமர்ஜென்சி காலத்தில் இருந்து ரெய்டுகளை பார்த்து வருகிறோம்.. இதெல்லாம் ஒருநாள் செய்திதான்.உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னாடி இன்னும் எத்தனை ரெய்டு நடத்தப்போறாங்களோ... ஆனால் தளபதி மு.க.ஸ்டாலினின் சாதனைகளை மக்கள் இப்போது உணர ஆரம்பித்துவிட்டார்கள்.தவெக அரசின் மீதான மக்களின் எதிர்ப்பை, அதிருப்தியை திசை திருப்பவே எதிர்க்கட்சியினர் மீது ரெய்டு நாடகம் அரங்கேறுகிறது. தவெக அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் செய்துகொண்டிருக்கும் ஊழல் தொடர்பான ஆதாரங்கள் எல்லாம் எங்களிடம் வந்துகொண்டு இருக்கிறது. அதனை உரிய நேரத்தில் வெளிப்படுத்துவோம்” என்றார்.