திமுகவை ஒன்றும் செய்ய முடியாததால் மத்திய அரசு பொய் வழக்குகளை போடுகிறது- ஆர்.எஸ். பாரதி
அமித்ஷா வித்தைகளையெல்லாம் முறியடிக்கும் இயக்கம் திமுக என திமுக அமைப்புசெயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதசார்பற்ற கூட்டணியின் வழக்கறிஞர் அணி கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில் திமுக அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை நெருக்கடி கொடுத்து வருகிறது. பீகார், கர்நாடகாவில் பாஜக அரசு என்ன செய்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும். திமுக ஆட்சியை சிறப்பாக நடத்தி வருவதால் ED, CBI, தேர்தல் ஆணையம் வைத்து ஏதாவது செய்யலாம் என பாஜக முயற்சி செய்கிறது. எங்களுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை, நாங்கள் பாஜக அரசை துணிச்சலாக எதிர்க்கிறோம்.
EPS சம்மந்தி வீட்டில் ED ரைட் நடத்திய போது முகத்தை மூடிக்கொண்டு சென்றவர் தானே எடப்பாடி பழனிச்சாமி? திமுகவை தொட்டுக் கூட பார்க்க முடியாது. அமலாக்கத்துறை, சிபிஐ, தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டு எதையாவது செய்யலாமா என பாஜக முயற்ச்சிக்கிறது. 75 ஆண்டுகளில் பல சோதனைகளை கண்ட இயக்கம் திமுக. அமலாக்கத்துறையோ அல்லது சிபிஐயோ எந்த விசாரணையை மேற்கொண்டாலும் அதை சந்திக்க தயார். அதனால் எவனுக்கும் யாருக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம். எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சம்மந்தி வீட்டில் ரெய்டு நடத்தியதும் கார் மாறி மாறி போய் டெல்லிக்கு சென்றுவிட்டு எங்களை பற்றி பேசுகிறார்.. எங்களுக்கு மடியில் கனமில்லாததால் தான் மத்திய அரசை துணிச்சலோடு எதிர்க்கிறோம். பழனிசாமி மகனையும் முக்கிய புள்ளியையும் டெல்லிக்கு அழைத்துக்கொண்டு முகத்தை மூடிக்கொண்டு சென்றார். நாங்கள் துணிச்சலோடு தைரியத்தோடு மத்திய அரசை எதிர்க்கிறோம்
இதுபோன்ற பிரச்னைகள் எங்களுக்கு சகஜம். இதையெல்லாம் பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள். எடப்பாடி பழனிசாமி எங்களை விமர்சனம் செய்து பேசுவதை பார்த்து மக்கள் சிரிக்கத்தான் செய்கிறார்கள். எங்களை விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி யோக்கியதை இல்லை. மகாராஷ்டிராவில் பாஜக என்ன செய்தது எனத்தெரியும். குடும்பத்தை பிரிப்பார்கள். பிரச்னை ஏற்படுத்துவார்கள். திமுக வலிமையாக உள்ளதால் எதையாவது செய்யலாம் என முயன்று வருகிறார்கள். அடிக்க அடிக்க தான் பந்து உந்தும். அதுபோல வழக்கு போட போட தான் அமைச்சர்கள் உறுதியாக நிற்பார்கள். யாரும் ஓட மாட்டார்கள். திருப்பரங்குன்றத்தில் உள்ளூர் மக்கள் அமைதியாக உள்ளார்கள். வெளியே இருந்து சென்று கலவரம் செய்கிறார்கள். மதுரை மண் வரலாற்று சிறப்புமிக்க மண். அந்நியர்களை உள்ளே விடாது. இடம் கொடுக்காது. அதை அறியாதவர்கள் சீண்டிப்பார்க்கிறார்கள். திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது.வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களும் மக்களும் முதல்வர் பின்னால் தான் உள்ளார்கள். திமுகவை ஒன்றும் செய்ய முடியாததால் மத்திய அரசு பொய் வழக்குகளை போடுகிறது
திருச்சி வேலுச்சாமி காங்கிரஸ் கட்சியில் இல்லை என செல்வப்பெருந்தகையே கூறிவிட்டார். அதனால் இல்லாதவரை பற்றி பேச தேவையில்லை. தமிழ்நாட்டில் கூட அப்பா மகனை இரண்டாகவும், அதிமுகவை 4 ஆகவும் பிரித்துள்ளனர். மோடி, அமித்ஷா வித்தைகளையெல்லாம் முறியடிக்கும் இயக்கம் திமுக. மேற்குவங்காளம், தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும், அடுத்த இலக்கு அதுதான் என்ற என அமித்ஷாவின் கருத்துக்கு, கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் இதுபோன்று தான் மோடியும், அமித்ஷாவும் சொன்னார்கள். அப்போது நாங்கள் 39 தொகுதியிலும் வெற்றி பெற்றோம். இப்போதும் பேசி வருகிறார்கள். எங்கள் இலக்கு 200 தொகுதியில் வெல்வது. இவர்கள் பேச பேச 234 தொகுதிகளிலும் வெல்வோம். கருத்துக்கணிப்புகள் ஒன்றும் விஜய் முன்னிலை என சொல்லவில்லையே. நாங்கள் தான் வெற்றி பெற்று ஆட்சியமைப்போம்” என பேசினார்.