#BREAKING நிர்மல் குமாருக்கு எதிராக திமுக உரிமை மீறல் கடிதம்!
சட்டப்பேரவையில் மிசா சட்டம் குறித்து உண்மைக்குப் புறம்பான, தவறான தகவல்களைப் பேசிய சட்ட அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு எதிராகச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் உரிமை மீறல் கடிதத்தை வழங்கினார் தி.மு.க கொறடா எ.வ.வேலு.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு எதிராக சபாநாயகரிடம் உரிமை மீறல் கடிதத்தை அளித்த பிறகு பேட்டியளித்த தி.மு.க கொறடா எ.வ.வேலு, “சட்டமன்றத்தில் இல்லாதவர்களைப் பற்றிப் பேசக்கூடாது என்பது விதி. ஆனால் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தொடர்ந்து அவையில் இல்லாதவர்களைப் பற்றியே பேசி, திசைதிருப்பும் அரசியலில் ஈடுபட்டுள்ளார்” என்றார்.
பின்னர் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “மின்வெட்டால் மக்கள் போராடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் அதனைக் கவனிக்காமல் முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவரை அவதூறாகப் பேசுவது, உண்மைக்கு மாறான கருத்துகளை அமைச்சர் நிர்மல்குமார் பேசியதைக் கண்டித்து, சபாநாயகரிடம் உரிமை மீறல் கடிதத்தைக் கொடுத்துள்ளோம். முதலமைச்சர் விஜய்க்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை கோரி கடிதம் வழங்கப்பட்டுள்ளது. எப்போதும் பொய் பேசுகிறார் அமைச்சர் நிர்மல் குமார்” என்றார்.