×

தவெக அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கும் திமுக! விவசாயிகளுக்காக ஆகஸ்ட் 3-ல் களமிறங்கும் ஸ்டாலின்!

 

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "NEET, EWS Quota எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசை காட்டிலும் த.வெ.க. அரசுதான் அதிகம் மிரளுகிறது.

தந்தை பெரியாரை கொள்கை தலைவர் என சொந்தம் கொண்டாடும் த.வெ.க. அரசு, பெரியார் திடலிலேயே போலிசாரைக் குவித்திருப்பது ஏன்?

திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரை பயணத்துக்கு கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம்? யாரின் அழுத்தத்துக்குப் பணிந்து இதை செய்கிறார்கள்?

கடந்த காலங்களில் மிக அமைதியான முறையில், அறவழியில், கண்ணியத்தோடு இதே போராட்டங்களை தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் கட்டுப்பாட்டுடன் நடத்திக் காட்டியிருக்கிறது.

அத்தகைய இயக்கத்தின் பரப்புரைப் பயணத்தைத் தடை செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது. சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது.

அடக்குமுறை அரசியலைக் கைவிட்டு ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் பரப்புரைப் பயணத்துக்கு உரிய அனுமதியைத் த.வெ.க. அரசு வழங்கிட வேண்டும்" என மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தி.க. கண்டனம்

முன்னதாக, தங்கள் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படாதது குறித்து பேசிய திராவிடர் கழக துணைத் தலைவர் கலி பூங்குன்றன், "என்ன காரணத்திற்காக பேரணிக்கு தடை விதிக்கப்பட்டது என்ற விளக்கம் காவல்துறை அளிக்கவில்லை. இதனை சட்டரீதியாக அணுகுவோம். இதனையும் மீறி தடை விதிக்கப்பட்டால் நிச்சயமாக மிகப்பெரிய அளவில் பேரணியை நடத்துவோம்" எனத் தெரிவித்தார்.

இதனிடையே, விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாத தவெக அரசை கண்டித்து, திமுக சார்பில் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.