"தேனியில் அதிமுக என்ற கட்சியே இப்போது இல்லை"- ஓபிஎஸ்
சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். தென் மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் நேர்காணலில் ஓபிஎஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், “தமிழ்நாடு முதலமைச்சர் இந்த 5 ஆண்டுக்கால ஆட்சியில் செய்த நன்மைகள், திட்டங்கள் அனைத்தும் மக்களிடத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அத்தனை திட்டங்களும் அற்புதமான திட்டங்கள் என்று மக்கள் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆகவே 2-வது முறையாக தளபதி தான் தமிழகத்தின் முதலமைச்சராக அரியணையில் அமர்வார். தேனியில் அதிமுக என்ற கட்சியே இப்போது இல்லை. தென்மாவட்ட மக்கள் மீண்டும் திமுக ஆட்சி வரவேண்டும் என்ற முடிவை ஏற்கனவே எடுத்துவிட்டார்கள். அதை என்னுடைய தேர்தல் சுற்றுப்பயணத்தில் தெரிந்து கொண்டேன். அத்தனை தொகுதிகளிலும் விருப்ப மனு அளித்த நபர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து கேட்டுள்ளார். வெற்றி வாய்ப்பை பற்றி பொறுப்பாளர்கள் விவரமாக ஸ்டாலினிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். திமுகவே தேர்தலில் நிச்சயம் வெல்லும்.” என்றார்.