எடப்பாடியும், உதயகுமாரும் அதிமுகவை அதளபாதாளத்தில் தள்ளி அழித்து வருகின்றனர்- ஓபிஎஸ்
ஏழை மாணவர்களுக்காகப் ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்த விலையில்லா மடிக்கணினி , தாலிக்கு தங்கம் திட்டம் போன்ற திட்டங்களை எடப்பாடி பழனிசாமி அரசு நிறுத்தி, மாணவர்களுக்கு, பெண்களுக்கு பெரும் துரோகம் செய்தது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
நெல்லை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி நாங்குநேரியில் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் தமிழ்நாடு தலை குனியாது என்ற தேர்தல் பரப்புரை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் முதலமைச்சரும் தற்பொழுது திமுகவில் இணைந்தவருமான ஓ.பன்னீர்செல்வம், “சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், கடந்த 2 ஆண்டுகளாகத் தேர்தல் பணிகளை மிகச் சிறப்பாகச் செய்து வரும் கட்சித் தொண்டர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் எனது பாராட்டுகள். திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை அறிந்து மிகச் சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. நாம் செலுத்தும் வரியில் 40 சதவீத நிதியை மத்திய அரசிடம் திருப்பிக் கேட்டால், வெறும் 4 சதவீதம் மட்டுமே நமக்குக் கிடைக்கிறது. இவ்வாறு ஒன்றிய அரசு நிதியைத் தர மறுத்தாலும், மாநில அரசின் சொந்த நிதியைக் கொண்டு புதிய திட்டங்களை முதலமைச்சர் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார்.
தொழில் வளர்ச்சியைப் பொறுத்தவரை தமிழகம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகளால், தென் மாவட்டங்களான மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பல புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் 11.5 சதவீத வளர்ச்சியுடன் முதலிடத்தில் இருப்பதே இதற்குச் சான்று. கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், ஏழை மாணவர்களுக்காகப் ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்த 'விலையில்லா மடிக்கணினி , தாலிக்கு தங்கம் திட்டம் போன்ற திட்டங்களை 2019 ஆண்டு அத்திட்டங்களை எடப்பாடி பழனிசாமி அரசு நிறுத்தி, மாணவர்களுக்கு, பெண்களுக்கு பெரும் துரோகம் செய்தார். தன்னை முதலமைச்சர் இருக்கையில் அமரவைத்தவர்களுக்கே மாபெரும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. அந்தப் பாவத்தின் விளைவாகவே மக்கள் அவரைத் தொடர்ந்து தண்டித்து வருகின்றனர். அவர் முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து தற்போது வரை நடந்த நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல்கள் என தொடர்ச்சியாக 11 தேர்தல்களில் அவர் தலைமையிலான கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அதிமுகவை எடப்பாடியும், உதயகுமாரும் அதளபாதாளத்தில் தள்ளி அழித்து வருகின்றனர்.
ஒரு முதலமைச்சர் எப்படி மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்பதற்குப் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் உதாரணமாகத் திகழ்ந்தனர். இன்று அதே வழியில், மக்களின் நாடித் துடிப்பை அறிந்து, வாக்குறுதிகளை நிறைவேற்றி, மக்களின் முகத்தைப் பார்த்து ஆட்சி செய்யும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் உள்ளார். நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு எவ்வித நிபந்தனையும் இல்லாமல், கொள்கை அடிப்படையில் முழுமையான ஆதரவை அளித்துள்ளோம். எங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் திருச்சியில் ஒரு பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தினோம்.உலகமே வியக்கும் வகையில் அமைந்த அந்த மாநாடு, எங்கள் தொண்டர்களின் எழுச்சியைக் காட்டியது. வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெற வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் அவர்கள் மீண்டும் இரண்டாவது முறையாக முதலமைச்சர் அரியணையில் அமர்வது உறுதி, ஒன்றிய அரசின் அச்சுறுத்தலுக்கு ஒரு போதும் தமிழ்நாடு தலை குனியாது” என்று பேசினார்.