×

தொழிலாளி அடித்து கொலை... தலைமறைவான திமுக எம்பி நீதிமன்றத்தில் சரண்!

 

பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் கடலூர் திமுக எம்பி டி.ஆர்.வி.ரமேசுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை  உள்ளது. இதில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த கோவிந்தராசு என்ற ஊழியர்  கடந்த மாதம் 19ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  இந்த வழக்கு  சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில்,  விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  கோவிந்தராசுவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

இதுகுறித்த விசாரணையில்  கோவிந்தராசுவின் மர்ம மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் கொலை வழக்காக மாற்றினர்.  இந்நிலையில் மரணம் தொடர்பாக எம்பி ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். தொழிற்சாலையில் பணியாற்றிய நடராஜ், அல்லாபிச்சை, சுந்தர், வினோ, கந்தவேல் ஆகிய 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களைக் கைதுசெய்தனர்.  சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து எம்.பி., ரமேஷ் தலைமறைவாகினார். ஊழியர் கோவிந்தராஜை கடுமையாக தாக்கி விஷம் கொடுத்து கொலை செய்திருப்பதை சிபிசிஐடி போலீசார் உறுதி செய்துள்ளனர்.

இதனிடையே ஆளுங்கட்சி எம்பியாக இருப்பதால் எப்படி கைது செய்யப்படுவார் என ஒரு தரப்பினரும் பாரபட்சம் பார்க்காமல் அவரைக் கைதுசெய்ய வேண்டும் என மற்றொரு தரப்பினரும் கூறினர். உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபுவுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அவரை கைதுசெய்ய முதலமைச்சர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிபிசிஐடி போலீஸார் ரமேசை வலைவீசி தேடிவந்தனர். இச்சூழலில் அவர் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.