“ஊழலற்ற ஆட்சி நடத்துகிறோம் என்பவர்களின் உண்மை முகம் இதுதான்”- கனிமொழி
தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் மீது பணமோசடி புகார் குறித்த செய்தியை பகிர்ந்துள்ள திமுக எம்பி கனிமொழி, ஊழலற்ற ஆட்சி நடத்துகிறோம் என்பவர்களின் உண்மை முகம் இதுதான் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கனிமொழி எம்பி தனது எக்ஸ் தளத்தில், “திருவைகுண்டம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் கு.சரவணன், ஆதிதிராவிடர் நலவாரிய உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி வைணவப் பெருமாள் என்பவரை ஏமாற்றி லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊழலற்ற ஆட்சி நடத்துகிறோம் என்பவர்களின் உண்மை முகம் இதுதான்!
ஆட்சிக்கு வந்த புதிதிலேயே, பெண் ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கிலும் இதே சட்டமன்ற உறுப்பினர் மீது பாதிக்கப்பட்ட பெண் குற்றஞ்சாட்டினார். அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் ஆய்வு என்ற பெயரில் மருத்துவரை அவமானப்படுத்தியவரும் இதே நபர்தான். எனது தூத்துக்குடி தொகுதி மக்களின் நலனுக்கு அச்சுறுத்தலாக இந்த நபர் இருக்கிறார் என்பது மேலும் கவலையளிக்கிறது. மக்களின் பிரதிநிதியாக நீடிக்கத் தகுதியற்ற சரவணன் மீதான குற்றச்சாட்டுகள் மீது உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.