ரூ.10 கோடிக்கு மேல் லஞ்சம்... இதுதான் ‘தூய சக்தி’யின் லட்சணமா?- விளாசிய கனிமொழி
வேட்பாளர்களைத் திருடும் கட்சிதான் தவெக என திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. விமர்சித்துள்ளார்.
தாராபுரம் தேர்தல் பரப்புரையில் உரையாற்றிய திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., “தவெகவின் குதிரைப் பேர அரசியலால்தான் தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மேடைக்கு மேடை அதிமுகவைத் தீர்ந்துபோன சக்தி எனக் கூறிய முதலமைச்சர் விஜய், அதே கட்சியில் இருந்தவர்களையே மீண்டும் தனது கட்சியில் சேர்த்து, தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளார். வேட்பாளர்களைத் திருடும் வேலையைத் தவெக செய்கிறது. அதிமுகவில் வெற்றி பெற்ற சத்தியபாமா, வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லக்கூட வாராமல், தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். மக்களுக்குத் துரோகம் செய்த சத்தியபாமாதான், மீண்டும் விசில் அடித்துக்கொண்டு ஓட்டுக் கேட்க வருகிறார். அன்று தீர்ந்துபோன சத்தியபாமா, இன்று மட்டும் தூய சக்தியா? தவெக என்பது திருட்டு சக்தி, ஊழல் சக்தி! முதலமைச்சர் தம்பி விஜய் தொடர்ந்து தூய சக்தி, தீய சக்தி, தீர்ந்துபோன சக்தி என்கிறார். அவர் ஸ்கிரிப்ட்டை மாற்ற வேண்டும். இல்லையென்றால் ஸ்கிரிப்ட் ரைட்டரையாவது மாற்ற வேண்டும். காலையில் எழுந்ததில் இருந்து திமுக.. திமுக.. திமுக... என எல்லா நேரமும் திமுகவையே நினைத்துக்கொண்டிருக்கிறார். தேர்தல் பரப்புரைக்குச் சென்றாலும் அங்கேயும் திமுக, திமுக என 32 முறை சொல்லியுள்ளார். தவெக ஆட்சி பொறுப்புக்கு வந்த 4 மாதங்களில் 580 குற்றங்கள் நடந்துள்ளன. அதில் 200-க்கும் மேற்பட்ட கொலைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான 300-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள், 8 காவல் மரணங்கள், 10 ஆணவக் கொலைகள் எனப் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. காவல்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் தம்பி விஜய் அவர்களே, இதுதான் நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கொண்டு வந்திருக்கக்கூடிய மாற்றமா?
மக்கள் மனதில் நிற்கக்கூடிய பெயர் திமுக என்பதால், அதையே விஜயும் சொல்லி வாக்குக் கேட்கிறார். திமுக தலைவர்கள் கூட இத்தனை முறை திமுகவின் பெயரைச் சொல்லியிருக்க மாட்டார்கள். தாராபுரம் தேர்தலிலும் திமுகவுக்காக விஜய் வாக்குச் சேகரிக்க வருவார். வந்து திமுக, திமுக, திமுக என்பார். எனவே, மக்களுக்காகப் போராடும் திமுகவிற்கு வாக்களியுங்கள்! ‘தூய சக்தி’ எனச் சொல்லிக்கொள்ளும் தவெக அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அமைச்சர் ஆனந்த் மீது சொந்தக் கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகியே ஊழல் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால், அவரைக் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்கள். இதுதான் தூய சக்தியின் லட்சணமா? இன்னொரு சாயப்பட்டறை முதலாளிகளிடம் ரூ.10 கோடிக்கு மேல் லஞ்சம் வாங்கியுள்ளதாகப் புகார் உள்ளது. இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? ‘தூய சக்தி’ அமைச்சர் ஒருவர் செல்போனில் குழந்தைக்கு மாத்திரை நெருக்கிக் கொடுத்ததாகப் பொய் சொல்கிறார். இதுவரை ஒரு பிளட் டெஸ்ட் எடுத்திருக்கிறீர்களா? உண்மையை விசாரித்து, அவர் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே முதலமைச்சர் விஜய் மீது ஐடி ரெய்டு வழக்கு இருக்கிறது. தவெக ‘தூய சக்தி’ என்று சொல்லிக்கொள்ளும் அருகதை கிடையாது. அதிமுக வேட்பாளருக்கு பாவம் பார்த்துக்கூட வாக்களிக்க வேண்டாம். ஏனெனில், அவர் எப்போது கட்சி தாவுவார் என்பதே தெரியாது. எடப்பாடி பழனிசாமி போன்றோருக்கு கட்சியின் தலைமை என்ற பொறுப்பு கையில் இருந்தால் போதும். கட்சியைப் பற்றி கவலைப்படமாட்டார். ஆனால், உறுதியோடு சொல்கிறோம். திமுகவில் இருந்து ஒருவரைக்கூட விலைக்கு வாங்க முடியாது. அந்த அளவிற்குக் கொள்கையோடு இருப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். இடைத்தேர்தல் நடக்கும் பகுதிகளில் மட்டும் குறைந்த நேரம் மின்வெட்டு உள்ளது. மற்ற பகுதிகளில் மின்வெட்டு தீவிரமாக உள்ளது. கேள்வி கேட்டால், பீஸ் புடுங்கிவிட்டு போகிறார்கள், காத்து வரவில்லை எனக் கதை விடுகிறார்கள். 4 மாதங்களாக பீஸ் புடுங்கிவிட்டு போகிறதைக் கூடவா கண்டுபிடிக்கத் துப்பில்லை” என விமர்சித்தார்.