பள்ளி வளாகத்திற்குள்ளேயே மாணவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை- கனிமொழி
வண்டலூர் அருகே பள்ளி வளாகத்திற்குள்ளேயே 10ஆம் வகுப்பு மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து, மூச்சடைக்கச் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிப்பதாக திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கனிமொழி தனது எக்ஸ் தளத்தில், “வண்டலூர் அருகே பள்ளி வளாகத்திற்குள்ளேயே 10ஆம் வகுப்பு மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து, மூச்சடைக்கச் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இன்று முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் மதுராந்தகம் வருகிறார் என்பதற்காக, இந்தச் சம்பவத்தை பொய் செய்தி எனக் கூறி, மூடி மறைக்க காவல்துறை முயற்சிப்பதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம்சாட்டும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை, இந்த தவெக அரசு நடத்திக் கொண்டிருக்கிறது.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைப்பதைவிட, முதலமைச்சரின் வருகைக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதுதான் காவல்துறையின் முன்னுரிமை என்றால், உண்மையில் இது யாருக்கான ஆட்சி? எப்படி அந்தச் சிறுமிக்கு நீதி கிடைக்கும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.