“எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள்”- கனிமொழி பெருமிதம்
எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில் சுமார் 30 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 20 கல்வெட்டுகளில் தமிழ்- பிராமி எழுத்துக்கள் உள்ளன. ‘சிகை கொற்றன்’ என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை இடம்பெற்றுள்ளது. ஒரு கல்வெட்டில் ‘சிகை கொற்றன் - வர கண்ட’ (சிகை கொற்றன் இங்கே வந்து பார்த்தான்) என பொறிக்கப்பட்டுள்ளது. ரோமானிய காலத்தில் தமிழ் வணிகர்கள் கடல் கடந்து எகிப்து சென்று, அங்கிருந்து உள்நாட்டுப் பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளனர் என்பதற்கு இதுவே முதல் நேரடி ஆதாரமாகும்.
இதுதொடர்பான செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள திமுக எம்பி கனிமொழி, “எகிப்து நாட்டின் ‘மன்னர்களின் பள்ளத்தாக்கு’ பகுதியில் அமைந்துள்ள பிரமிடுகளில் உள்ள பழமையான கல்வெட்டுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பழந்தமிழர்களின் கடல் கடந்த பயணங்கள், பன்னாட்டு வணிகத் தொடர்பு மற்றும் உலகின் பிற நாகரிகங்களுடனான உறவு குறித்து மேலும் பல புதிய ஆய்வுகள் மேற்கொள்வது காலத்தின் கட்டாயமாகத் தோன்றுகிறது.
அப்படியான ஆய்வுகள், பண்டைய தமிழ் நாகரிகத்தின் சிறப்புகளைப் பறைசாற்றுவதுடன், இந்த நவீன யுகத்திலும் சரியான வெளியுறவுக் கொள்கைகளை வகுத்து, இந்த நாட்டின் பாதுகாப்பை - பொருளாதார நலனை - தனித்துவத்தை உறுதி செய்ய முடியாமல் திணறும் ஒன்றிய பாஜக அரசுக்கு பாடம் கற்றுக்கொள்ள உதவிகரமாக அமையும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.