“பீகார், ஹரியானா, மகாராஷ்டிராவை ஏமாற்றலாம், ஆனால் தமிழ்நாட்டை ஏமாற்ற முடியாது”- கனிமொழி
பீகாரை ஏமாற்றலாம், ஹரியானாவை ஏமாற்றலாம்,மகாராஷ்டிராவை ஏமாற்றலாம் ஆனால் தமிழ்நாட்டை ஒரு காலமும் ஏமாற்ற முடியாது. SIR கொண்டு வந்தாலும் எங்களுடைய அறிவை பயன்படுத்தி நாங்கள் வெல்வோம் என திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கூறினார்.
தி.மு.க இளைஞர் அணி முன்னெடுக்கும் `தி.மு.க 75 –அறிவுத்திருவிழா’ நிகழ்ச்சியில் "இரு வண்ணக்கொடிக்கு வயது 75" என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 2ம் நாள் கருத்தரங்க அமர்வில் கலந்துகொண்டு பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, “அறிவுத்திருவிழாவை ஏன் நடத்துகிறோம் என்று யோசித்தபோது தற்போது அறிவு தேவைப்படுகிறது. நிலாவிற்கு முதலில் சென்றவர் யார் என மாணவர்களிடம் கேட்டபோதும், நீல் ஆம்ஸ்ட்ராங் என சரியான பதில் கூறிய போது ஒன்றிய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தாகூர் நிலாவுக்கு முதலில் அனுமான் சென்றார் என அறிவியலை தவறாக சொல்லும இதுப்போன்றவர்களுக்கு தற்போது அறிவு தேவைப்படுகிறது.
இந்தியாவில் பாராளுமன்றக்கூட்டத்தொடர் அறிவித்திருக்கிறார்கள். 15 நாள் தான் பார்லிமென்ட் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.ஒன்றிய அரசுக்கு எந்த விவாதமும் பிடிக்காது,ஒரு மாதம் நடத்த வேண்டிய குளிர் கால கூட்டத்தொடர் பதினைந்து நாட்கள் தான் நடைபெற இருக்கிறது.ஏனென்றால் விவாதத்தில் நம்பிக்கை இல்லாத ஆட்சி ஒன்றிய அரசு. அவர்களுக்கு எதிராக மறுபடியும் நாம் கையில் அறிவு என்ற ஆயுதத்தை எடுக்க வேண்டும். அதற்கான விவாதங்கள் இப்படிப்பட்ட மேடைகள் மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். நம் முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ்நாடு முழுவதும் புத்தக கண்காட்சி அமைத்துள்ளார். ஒரு எழுத்தாளனுடைய மிகப்பெரிய கனவு வீடு வாங்க வேண்டும், எழுத்தாளர்களுக்கு ஒரு வீட்டை நான் வழங்குகிறேன் என சொன்ன நம் முதலமைச்சர். அந்த எழுத்தாளர்களை ஒவ்வொரு ஊராக புத்தகத் திருவிழா வழியாக கொண்டாடிக்கின்ற ஆட்சி திராவிட முன்னேற்றக் கழகம். பீகாரை ஏமாற்றலாம், அரியானாவை ஏமாற்றலாம்,மகாராஷ்டிராவில் ஏமாற்றலாம், தமிழ்நாட்டில் அது நடக்காது. எங்களுக்கு களத்தில் உடன்பிறப்புகள் இருக்கிறார்கள். சட்டமன்ற தேர்தல், எஸ். ஐ. ஆர். என ஒரு புறம் இருந்தாலும், நாங்கள் அறிவை வளர்க்கிறோம் என இந்த திருவிழாவை நடத்திக் கொண்டிருக்கின்ற திமுக இளைஞர் அணி, உதயநிதி அவர்களுக்கும் எங்களுடைய வாழ்த்துக்கள்” என்றார்.