ஆர்.என்.ரவி ஆளுநரா? பாஜக தலைவரா?- கனிமொழி எம்பி
பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பட்டியலில் பாஜக ஆளும் மாநிலங்களே முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கனிமொழி எம்.பி. பதிலடி அளித்துள்ளார்.
ஆளுநர் ரவி, “தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன் தேசிய சராசரியைவிட மிகவும் குறைவாக உள்ளது. 50 சதவீதத்துக்கும் அதிகமான உயர்நிலைப்பள்ளி மாணவர்களால் 2 இலக்க கூட்டல் கழித்தலைக் கூட செய்ய முடியவில்லை. ஏழைகளுக்கு எதிராக சமூகப் பாகுபாடு உள்ளது. இளைஞர்களிடம் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது” எனக் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள திமுக எம்பி கனிமொழி, “தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பட்டியலில் பாஜக ஆளும் மாநிலங்களே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பட்டியலில் முதல் 3 இடங்களை உ.பி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களே பிடித்துள்ளன. தமிழ்நாடு பட்டியலில் 10 இடங்களுக்குள் கூட வராத தமிழ்நாட்டின் மீது பழி சுமத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர் பொறுப்பு வகிப்பது ஆளுநராகவா? இல்லை பாஜக தலைவராகவா? பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலம் என்று பழிப்போடும் ஆளுநருக்கு, தமிழர்கள் மீது அப்படி என்ன வெறுப்பு?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.