ஜன.15-18 வரை ”சென்னை சங்கமம் நம்ம ஊர் திருவிழா”- கனிமொழி
ஜன.15-18 வரை சென்னை, ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட 20 இடங்களில் நடைபெறவுள்ள "சென்னை சங்கமம்-நம்ம ஊர் திருவிழா"-வை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் முதலமைச்சரால் தொடங்கிவைப்படவுள்ளதாக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி தெரிவித்தார்.
சென்னையில் தை மாதம் தொடக்கத்தில் பொங்கல் திருவிழாவின் போது "சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா" என்ற மாபெரும் கலைவிழா கடந்த கலை நிகழ்ச்சிகள் நான்கு ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டின் கலைநிகழ்ச்சிகள் நாளை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. தொடக்க விழாவை அடுத்து, 'சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 20 இடங்களில் ஜனவரி 15 முதல் 18 வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக சென்னை எழும்பூர் அருங்காட்சியத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கனிமொழி எம்பி, சென்னை சங்கமம் 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது, நாளைய தினம் ராஜரத்தினம் மைதானத்தில் முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. சென்னையில் 20 இடங்களில் "சென்னை சங்கமம்" நடைபெற உள்ளது. கடந்த ஆண்டைப்போலவே தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருந்து 1500 கலைஞர்கள் இதில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். இந்த முறை கோ ஆப் டேக்ஸ் உடன் இணைந்து ஆடை அலங்கார அணிவகுப்பு (பேஷன் ஷோ) சென்னை சங்கமம் நடத்த உள்ளோம். அது வருகிற 17 ஆம் தேதி எழும்பூர் அருங்காட்சியகத்தில் பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சென்னை சங்கமத்துடன் இணைந்து உணவு திருவிழாவும் நடைபெற உள்ளது. கிராமிய கலைஞர்கள் தினம் தோறும் அவர்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் போராட்டங்கள் அனைத்தையும் எடுத்துக் கூறும் மேடையாக சென்னை சங்கமம் இருக்கும், என்றார்.
அடுத்தாண்டு தேவைப்பட்டால் வட சென்னை அதிகமான பகுதிகளிலும் சென்னை சங்கம் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கிராமிய கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஊதிய தொகையும் உயர்த்தப்பட்டு வழங்கி வருகிறோம். 2500 கிராமிய கலைஞர்களுக்கு ஓய்வூதியம் அதிகப்படுத்தி வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மட்டுமல்லாமல் பல்வேறு நகரங்களில் தொடர்ந்து இது போன்ற விழாக்களை நடத்தி வருகிறோம் என தெரிவித்தார். மேலும், உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட கிராமிய விளையாட்டுகள் கலைத்திருவிழாவில் இடம்பெறும் என்றும்,6 மாநிலங்களைச் சேர்ந்த கலை குழுக்கள் சென்னை சங்கமம் திருவிழாவில் கலந்து கொள்கின்றார்கள். குஜராத்தை சேர்ந்த கலைக்குழு நாளைய தொடக்க நிகழ்வில் கச்சேரி நிகழ்த்த உள்ளதாக தெரிவித்தார்.