×

“அதிமுகவை அமித்ஷா திமுகவாக எடப்பாடி பழனிச்சாமி மாற்றிவிட்டார்”- கனிமொழி

 

அதிமுகவை அமித்ஷா திமுகவாக எடப்பாடி பழனிச்சாமி மாற்றிவிட்டார் என திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. விமர்சித்தார்.

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் பவானி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து கனிமொழி எம்.பி. பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, “
தமிழகத்திற்குத் துரோகம் செய்வதற்காகவே ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளது எதிரணி. கூட்டணியின் உண்மையான தலைவர் பாஜக தான். அவர் சொல்வதைக் கேட்டு கைகட்டி நிற்பவர்தான் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவை அமித்ஷா திமுக என்று மாற்றிவிட்டார். ஒன்றிய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை. ஒன்றிய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் திட்டங்களைக் கொண்டு வர முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால், அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கும், நாட்டிற்கும் எதிரானவை.தமிழக மக்கள் கடுமையாக எதிர்த்த சி.ஏ.ஏ திட்டத்தைக் கொண்டு வர உறுதுணையாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. அதேபோல், கலைஞர் கொண்டு வந்த மருத்துவக் கல்லூரிகளில் நம் பிள்ளைகள் படிக்க முடியாதபடி நீட் தேர்வை அனுமதித்து, அதற்குத் துணை நின்றவரும் அவரே. நாடு முழுவதும் மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளது. ஜெயலலிதா அவர்கள் கூட ‘உதய்’ மின் திட்டத்தில் கையெழுத்திடவில்லை. ஆனால், அதிலும் கையெழுத்துப் போட்டு மக்களை வாட்டி வதைக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி.

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயரை, புரியாத அளவிற்கு மாற்றிவிட்டார்கள். அதில் இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பு நடக்கிறது. இந்தத் திட்டத்தை முடக்குவதற்காக மோடி அரசு நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துவிட்டது. இன்று யாருக்கும் சரியான வேலை கிடைப்பதில்லை, ஊதிய உயர்வும் இல்லை. டெல்லியில் அமர்ந்து கொண்டு, இங்குள்ள கிராமத்தில் யாருக்கு வேலை தர வேண்டும், எந்த மாநிலத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்கிறார்கள்.மக்களுக்கான திட்டங்களை அவர்கள் அழிக்கும்போது, அதை எதிர்த்துக் குரல் கொடுக்கும் ஒரே தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மட்டும்தான். எடப்பாடி பழனிசாமி வாய் திறக்க மறுக்கிறார். யாருடைய காலில் விழுந்து ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தாரோ, அந்த சசிகலாவுக்கு இன்று அதிமுகவில் இடமில்லை. அவருக்கு முன்பு முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ் அவர்களே இன்று தமிழகத்தைக் காக்க மு.க. ஸ்டாலினால் மட்டுமே முடியும் என்று நம்முடன் இணைந்துள்ளார்.

தமிழகத்தை முன்னேற்ற மு.க. ஸ்டாலினால் மட்டுமே முடியும் என்பது மக்களுக்குப் புரிந்துவிட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு அது இப்போதுதான் புரியத் தொடங்கியுள்ளது. அதன் விளைவாக ஏற்பட்ட தோல்வி பயத்தினால், ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்பதை மறந்து தரம் தாழ்ந்து பேசி வருகிறார். இந்தத் தேர்தலில் மக்கள் அவருக்குக் கண்டிப்பாகப் பாடம் புகட்டுவார்கள். பாஜகவுடன் கூட்டணி வைப்பவர்களின் நிலை என்னவாகும் என்பது அனைவரும் அறிவார்.நாம் இந்தி படிக்க மாட்டோம் என்பதால், தமிழக மாணவர்களின் கல்விக்கான நிதி 3,500 கோடி ரூபாயை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராகச் செயல்படும் இந்தக் கூட்டணியை நாம் முறியடிக்க வேண்டும். இது கீழடிக்கும் நாக்பூருக்கும் இடையிலான சித்தாந்தம்.மாநில உரிமைகளுக்காகப் போராடும் மு.க. ஸ்டாலின், தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியுள்ளார். மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் மகளிருக்கான உரிமைத் தொகை 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.சுமார் 35 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.பவானி ஜமுகாலத்தை சர்வதேச அளவில் சந்தைப்படுத்த மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும்.மகளிருக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும். இந்தப் பகுதியில் அமைச்சராக இருந்த கருப்பணன் இந்தத் தொகுதிக்கு என்ன செய்திருக்கிறார்? எதையும் செய்யவில்லை. ஆனால், நமது ஆட்சியில் பேரூராட்சி அலுவலகம் கட்டித் தரப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தின் எதிர்காலத்தைக் காக்க மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.