விவசாயம் குறித்து கத்தி படத்தில் முதல்வர் விஜய் ஒரு வசனம் சொன்னாரே..? நியாபகம் இருக்கா..?- திமுக எம்.எல்.ஏ
விவசாயம் குறித்து கத்தி படத்தில் முதல்வர் விஜய் ஒரு வசனம் சொன்னாரே..? நியாபகம் இருக்கா..? ஆனால் இன்று முதல்வர் எடுத்த நடவடிக்கை என்ன..? நியாயமா இது..? என தி.மு.க. எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பேரவையில் பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர், “தமிழ்நாடு நீர்வளத்துறையின் கீழ் உள்ள காலிங்கராயன் அணைக்கட்டு, கல்லணை, வீராணம் ஏரி, கொள்ளிடம் கீழணைக்கட்டு உள்ளிட்ட நீர்ப்பாசன கட்டமைப்புகளுக்கு 2022ஆம் ஆண்டு உலக பாரம்பரிய நீர்ப்பாசன விருது வழங்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு கச்சமங்கலம் அணைக்கட்டுக்கு சிறந்த திட்டம், சிறந்த கட்டுமானப் பணி மற்றும் பராமரிப்புக்கான மத்திய நீர்ப்பாசன விருது வழங்கப்பட்டது. 2025ஆம் ஆண்டு செய்யாறு, கொடியாறு உள்ளிட்ட அணைக்கட்டுகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஒன்றிய அரசு எந்த மசோதாவும் வெளியிடாத நிலையிலும், அதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்திய முதலமைச்சர் விஜய், மேகதாது விவகாரத்திலும் தனிக்கவனம் செலுத்த வேண்டும். காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் மெத்தனமாக இருக்கக் கூடாது.
தமிழ்நாடு முதலமைச்சரின் பயணத்தை யார் முடிவு செய்ய வேண்டும்? நமது பயணத்தை கர்நாடக முதலமைச்சரால் எப்படி சொல்ல முடியும்? இது எந்த விதத்தில் நியாயம்? நமக்கென்று ஒரு மரியாதை உள்ளது. முதலமைச்சர் அவமானப்பட வேண்டிய அவசியம் இல்லை. பயப்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த சூழலும் விவசாயத்தை விடக் கூடாது என கத்தி திரைப்படத்தில் முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். ஆனால், தற்போது டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்து, விவசாயத்தை கைவிடும் சூழல் உள்ளனர். இது நியாயமா? காங்கிரஸ், பா.ஜ.க.வை எதிர்க்கக் கூடாது என்பதற்காக மேகதாது அணை மற்றும் காவிரி விவகாரத்தில் த.வெ.க. அரசு மென்மையான போக்கைக் கடைபிடிக்கிறது. எதற்காக பயப்பட வேண்டும்? செய்தியாளர்களை பார்த்தாலே அமைச்சர் என்.ஆனந்த் கிடு கிடுனு போய்டுறாரு.. அதுவும் ஒரு டெக்னிக் தான்.. ஆனா அதுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஒரு விளக்கம் கொடுத்தாரு பாருங்க, அதை நான் பாத்து பாத்து ரசிச்சேன்” என்றார்.
-