×

தமிழருக்கு ஆதரவில்லை... ஆந்திரகாரருக்கு முதல்வர் ஆதரவு!

 

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்மொழிந்த தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவில்லை என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கர் தனது பதவியை கடந்த மாதம் 21ஆம் தேதி ராஜி​னாமா செய்​தார். இதையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வுசெய்வதற்கான தேர்தலை அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், போட்டி இருந்தால், அடுத்த மாதம் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடை​பெறும் என்று அறி​வித்​துள்​ளது. குடியரசு துணைத் தலை​வர் பதவிக்​கான வேட்​புமனு தாக்​கல் கடந்த 7 ஆம் தேதி தொடங்​கியுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிர மாநில ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டுள்ளார். இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். 


இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “இந்தியா கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரு. சுதர்சன் ரெட்டி அவர்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகள். நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட்டு, குடிமக்களின் உரிமைகள் மற்றும் சமூகநீதியை உயர்த்திப் பிடித்த நீதியரசராக விளங்கிய அவர், தமது பணிக்காலம் முழுவதும் அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைப் போற்றிப் பாதுகாத்தவர் ஆவார். நமது நாட்டின் அமைப்புகளெல்லாம் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் சூழலில், திரு. சுதர்சன் ரெட்டி அவர்களை வேட்பாளராக்கியதன் மூலம், மக்களாட்சியையும் அரசியலமைப்பின் விழுமியத்தையும் பாதுகாப்பதில் நமது ஒருமித்த உறுதிப்பாடு வலுப்படுகிறது.

சுதந்திரமாகச் செயல்பட்டு, இந்திய மக்களாட்சியைப் பாதுகாக்க வேண்டிய தன்னாட்சி அமைப்புகள் அத்தனையும் பா.ஜ.க.வின் துணை அமைப்புகளாக மாற்றப்பட்டு, அரசியலமைப்புச் சட்டமே ஆபத்தில் சிக்குண்டுள்ளது. இத்தகைய சூழலில், இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளான மதச்சார்பின்மை, கூட்டாட்சியியல், சமூகநீதி மற்றும் வேற்றுமையில் ஒற்றுமையில் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஒருவரை ஆதரிப்பதுதான் நம்முன் உள்ள கடமை! நீட் விலக்கு, கீழடியின் தொன்மையை ஏற்றுக்கொண்டு அங்கீகரிப்பது, நியாயமான நிதிப் பகிர்வு, கல்வி நிதி விடுவிப்பு உள்ளிட்ட தமிழ்நாட்டின் நியாயமான பல கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்து வருகிறது. ஆளுநர்கள் மூலமாக இணை அரசாங்கம் நடத்தி, மாநில அரசுகளின் செயல்பாட்டை முடக்கி, உயர்கல்வி நிறுவனங்களை வலுவிழக்கச் செய்யும் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது.