தி.மு.க. அரசு இருப்பதால் மட்டுமே தமிழ்நாடு காப்பாற்றப்படுகிறது- மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் கிரிக்கெட் பார்ப்பது தவறில்லை. முதலமைச்சராக இருந்து கொண்டு, “தூத்துக்குடியில் 13 அப்பாவிகளைச் சுட்டுக் கொன்றதையே டி.வி.யில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்” என வெட்கமே இல்லாமல் சிரித்துக் கொண்டே சொன்னீர்களே, அதுதான் மாபெரும் தப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்துவிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நான் வந்திருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு, தமிழ்நாட்டின் உரிமைகளைத் தி.மு.க.வால் மட்டும்தான் காப்பாற்ற முடியும் என்று நிரூபித்துவிட்டு, உங்கள் முன்னால் கெத்தாக நின்று கொண்டிருக்கிறேன். இப்போது சொல்லுங்கள், திராவிட மாடல் 2.0-வுக்கு நீங்கள் ரெடியா? ஒட்டுமொத்த தமிழ்நாடும் ‘OK’ சொல்லிட்டார்கள். கிருஷ்ணகிரி ரெடியா? நன்றி.காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மரியாதைக்குரிய மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் வந்திருக்கிறார். நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி இந்த அளவிற்கு வலிமையாகத் தொடர அடித்தளமாக இருக்கும் மூத்த தலைவர்! அதேபோன்று, நேற்று அன்பிற்கினிய சகோதரர் ராகுல் காந்தி அவர்களும், தமிழ்நாடு வந்து பிரசாரம் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவர் பிரசாரம் செய்யும்போது ஒன்றை குறிப்பிட்டுச் சொன்னார். “இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை மோடி அவர்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியாது. அதனால்தான் அடிமை அ.தி.மு.க. ஆட்சியைத் தமிழ்நாட்டில் நிறுவ வேண்டும் என்று பார்க்கிறார்” என வலிமையாகப் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார்.
கிருஷ்ணகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாரூர் ஏரி - கிழக்கு பிரதான கால்வாய் அமைத்து, போச்சம்பள்ளி மற்றும் ஊத்தங்கரை வட்டங்களில் இருக்கும் 33 ஏரிகளுக்குத் தண்ணீர் நிரப்பும் திட்டம். ஓசூர் மாநகராட்சியில் பாதாளச் சாக்கடைத் திட்டம். அஞ்செட்டியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம். ஓசூர் விஸ்வநாதபுரத்தில் தோழி விடுதி. ஓசூரில் புறநகர்ப் புதிய பேருந்து நிலையப் பணிகள். புதிய ரயில்வே மேம்பாலம் அறிவிப்பு என கிருஷ்ணகிரி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு பெரும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. ஒரு காலத்தில் சிறிய தொழில் நகரமாக அறியப்பட்ட ஓசூர், இன்றைக்கு உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் தங்களின் முதலீடுகளுக்காகத் தேர்ந்தெடுத்து, தொழிற்சாலைகளை நிறுவி, இயக்கி வரும் நவீன தொழில் மையமாக உருவெடுத்திருக்கிறது. சூளகிரி, பர்கூர், குருபரப்பள்ளியில் தொழிற் பூங்காக்களைச் சிப்காட் நிறுவனம் நிறுவியிருக்கிறது.இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், ஓசூர் சிப்காட்டில் ஐநாக்ஸ் திரவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலை. டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை விரிவாக்கம். ஓசூர் எல்காட்டில் அசெண்ட் நிறுவன உற்பத்தித் திட்டம்.7 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சூளகிரி சிப்காட்டில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்தி, விமான இயந்திரங்கள், கியர்பாக்ஸ் பாகங்கள் உற்பத்தி செய்யவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்காகத்தான் ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று நாம் கோரிக்கை வைக்கிறோம். ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள். ஓசூர் வளர்ச்சிக்கு இதை விடத் துரோகம் இருக்க முடியுமா? தமிழ்நாட்டில் இருக்கும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை சமீபத்தில் 40 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்படிப்பட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பொறாமை எண்ணத்தோடு பா.ஜ.க. தடுக்கப் பார்க்கிறது. இதைக் கூடத் தட்டிக் கேட்க முடியாமல் பழனிசாமி இருக்கிறார். வாக்கு கேட்டு அவர்கள் வந்தால் நீங்கள் முகத்திற்கு நேராக இந்தக் கேள்விகளைக் கேளுங்கள். “முதலமைச்சர் சொல்லுவது உண்மையா இல்லையா?” என்று கேளுங்கள்!
தமிழ்நாட்டு உரிமைகளுக்காகப் பா.ஜ.க.விடம் குரல் கொடுக்க வக்கில்லாத பழனிசாமி, என்னைப் பார்த்து என்ன கேட்டிருக்கிறார்? நான் காரில் செல்லும்போது கிரிக்கெட் பார்த்தது தப்பாம். பழனிசாமி அவர்களே... காரில் செல்லும்போது கர்ச்சீப் வைத்து முகத்தை மூடிக் கொண்டு சென்றீர்களே? அதுதான் கேவலம். இன்னொன்றும் சொல்லியிருக்கிறார். “ஒரு முதலமைச்சர் கிரிக்கெட் பார்க்கலாமா?” என்று கேட்டிருக்கிறார். முதலமைச்சர் கிரிக்கெட் பார்ப்பது தவறில்லை. முதலமைச்சராக இருந்து கொண்டு, “தூத்துக்குடியில் 13 அப்பாவிகளைச் சுட்டுக் கொன்றதையே டி.வி.யில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்” என வெட்கமே இல்லாமல் சிரித்துக் கொண்டே சொன்னீர்களே, அதுதான் மாபெரும் தப்பு, மிகப்பெரிய கேவலம்! பழனிசாமியின் ஓனர் பிரதமர் மோடி அவர்கள், நேற்று இரவு எட்டு மணிக்கு, தொலைக்காட்சியில் பேசியிருக்கிறார். அதை பிரதமர் மோடியின் உரை என்று சொல்வதைவிட, பா.ஜ.க. தலைவர் மோடி அவர்களின் அரசியல் உரை என்றுதான் சொல்ல வேண்டும்! தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, தேசியக் கொடியின் பின்னணியில், வார்த்தைக்கு வார்த்தை எதிர்க்கட்சிகளைத் திட்டி அவர் பேசியிருக்கிறார். தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேச வேண்டியதை எல்லாம் அரசு சார்பான உரையில் பேசியிருக்கிறார். இது அப்பட்டமான விதிமீறல். தொகுதி மறுவரையறை சட்ட விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் முதல் முறையாகத் தோல்வியடைந்த பதற்றத்தில் அவர் இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்கு நடுவில் இந்தக் கருப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தால் நாம் அசால்ட்டாக விட்டுவிடுவோம் என்று நினைத்தார். ஆனால், அப்படியே உல்டாவாக நடந்துவிட்டது. தென் மாநில மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். அவருடைய கூட்டணிக்குப் படுதோல்வி உறுதியாகியிருக்கிறது. அதனால், டேமேஜ் கண்ட்ரோல் செய்ய இப்போது என்ன முயற்சி செய்கிறார்? மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கட்சிகள் தடுக்கிறார்கள் என்று அபாண்டமாகப் பேசியுள்ளார். இதுவும் வேலைக்கே ஆகவில்லை. தேர்தல் நேரத்தில் அவர் நம் மீது ஏவ நினைத்த அஸ்திரம் இப்போது பூமராங் ஆகி அவருக்கே வினையாகிவிட்டது. முதலுக்கே மோசமாகிவிட்டது. மோடி அவர்களே… “It's too late”. ஏப்ரல் 17-ஆம் தேதியோடு NDA கூட்டணியின் chapter close ஆகிவிட்டது! பா.ஜ.க. கூட்டணிக்கு மெஜாரிட்டி இருக்கும் நாடாளுமன்றத்திலேயே NDA கூட்டணியை நிலைகுலைய வைத்திருக்கிறோம். அப்போது, பா.ஜ.க.வுக்கு அட்ரஸே இல்லாத தமிழ்நாட்டில் என்ன நிலைமை ஆகும் என்று மட்டும் எண்ணிப் பாருங்கள். தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்தித்துவிட்டுதான் நான் இதை தெளிவாகச் சொல்கிறேன். திராவிட மாடல் அரசின் திட்டங்கள் எல்லா ஊரிலும் இன்றைக்கு செம ‘ரீச்’ ஆகியிருக்கிறது. நான் எந்த வீட்டுக்குப் போனாலும் அங்கு பயனாளிகள் இருக்கிறார்கள். நான் பெருமையோடு சொல்லுகிறேன்... இந்த அரசு “குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை“ அனைவருக்குமான நலத்திட்டங்களைச் செய்து கொண்டிருக்கிறது. ” எனக் கூறினார்.