காமராஜரை டெல்லியில் வீட்டோடு வைத்து கொளுத்த பார்த்தார்கள்- மு.க.ஸ்டாலின் பரபரப்பு
திமுக, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். திருச்சுழியில் போட்டியிடும் அமைச்சர் தங்கம் தென்னரசு, அருப்புக்கோட்டையில் களமிறங்கும் அமைச்சர் ராமச்சந்திரன், விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய ஸ்டாலின், “சிவகாசி பட்டாசு என்றாலும் விருதுநகர்தான், சாத்தூர் பலகாரமாக இருந்தாலும் விருதுநகர்தான், திருவில்லிபுத்தூர் பால்கோவா என்றாலும் விருதுநகர் தீப்பெட்டியாக இருந்தாலும் விருதுநகர்தான், பரோட்டாவாக இருந்தாலும் விருதுநகர்தான், காலண்டராக இருந்தாலும் விருதுநகர்தான். ஈரோடு என்றால் தந்தை பெரியார். காஞ்சி என்றால் பேரறிஞர் அண்ணா, திருவாரூர் என்றால் கலைஞர் போல விருதுநகர் என்றால் காமராஜர். காமராஜர் மண் இது. கல்வி கண் திறந்த காமராஜரின் ஊருக்கு வந்திருக்கிறேன். தமிழ் மீது பாஜகவுக்கு எப்போதும் வெறுப்புதான். சங்கி கூட்டத்தினர் காமராஜரை டெல்லியில் வீட்டோடு வைத்து கொளுத்த பார்த்தார்கள். அரசியல் கடந்து தனிப்பட்ட முறையிலும் எனக்கு காமராஜர் மீது மிகுந்த மரியாதை உண்டு. உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் என் திருணமத்திற்கு நேரில் வந்து வாழ்த்தியவர் ஐயா காமராஜர். அதை என்னால் எப்போதும் மறக்க முடியாது. என்.டி.ஏ. ஆட்சி தமிழ்நாட்டிற்கு வந்தால் என்ன ஆகும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை” என்றார்.