×

விரைவில் பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை - அமைச்சர் தங்கம் தென்னரசு

 

சிவகாசி அருகே திருத்தங்கல்லில்  கூட்டுறவுத்துறை சார்பாக தமிழக முதலமைச்சர் அறிவித்த மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் புதிய கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் தலைமையில், மேயர் சங்கீதாஇன்பம் முன்னிலையில், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொள்ள நடைபெற்றது. 

விழாவில் பங்கேற்று பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “கூட்டத்தின் தொடக்க நிகழ்வாக பள்ளி மாணவிகள் தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடிய போது ஆண்களும், நானும் பாடாமல் இருந்த நிலையில், கலந்து கொண்ட பெண்கள் அனைவரும் தமிழ் தாய் வாழ்த்து பாடியதற்காக அவர்களுக்கு எனது பாராட்டை தெரிவிக்கிறேன். பெண்கள் தங்களை தாங்களே சார்ந்து இருக்க வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு உண்டான உண்மையான விடுதலை கிடைக்கும். தற்கால பெண்கள் இன்றைய தினம் கண்டம் விட்டு கண்டம் பாய்கின்றனர். அந்த சக்தி கொண்ட பெண்கள் பொருளாதாரம் மற்றும் அரசியலில் முன்னேறி வர வேண்டும். 

பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேற வேண்டும் என்றால், அடிப்படையில் கல்வி அறிவு பெற வேண்டும். பெண்கள் உயர் கல்வியில் தமிழகம் சிறப்பு பெற்று இந்தியாவிலேயே முதல்  மாநிலமாக உள்ளது. உயர்கல்வி கற்பதில் ஆண்களை விட பெண்கள்தான் எண்ணிக்கையில் கூடுதலாக இருந்து, பெரிய நிறுவனங்களி ன் உயர்பதவிகளில் அதிகமாக உள்ளனர். கல்வியின் வாயிலாக பெண்களுக்கு சமூக நீதியுடன், பொருளாதாரம் கிடைக்கும். பெண்கள் வீட்டிலிருந்து வெளியே வந்து வேலைவாய்ப்பு பெற்று முன்னேற்றம் காண வேண்டும் என்பதற்காக தான் தமிழக அரசு கட்டணமில்லா பேருந்து வசதி செய்து கொடுத்துள்ளது. 

விவசாயத்திற்கு பயிர் கடனை   தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது. அடுத்தடுத்து கடன் பெறும் சுய உதவி குழுவினர் கடன் தொகையை முறையாக கட்ட வேண்டும். மீண்டும் தள்ளுபடி செய்வார்கள் என நினைக்க கூடாது. உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு உதவி தொகையாக 1000 ரூபாயும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, மகளிர்களுக்கு கட்டணம் இல்லா பேருந்து என தமிழக அரசு செயல்படுத்தி வரும் நிலையில், இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் அவர்களுக்கான உரிமை தொகை விரைவில் வழங்கும். அதற்கான நேரம் வந்துவிட்டது. இதன் மூலமாக பெண்கள் விடுதலை மற்றும் பெண்களுக்கான மேம்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்களின் எழுச்சிக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் திமுக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது” என்றார்.