×

திமுக ஆட்சி முடிவதற்குள் நிச்சயம் இது நடக்கும்- செந்தில் பாலாஜி

 

வரும் ஐந்து ஆண்டுகளில் கூடுதலாக 6250 மெகாவாட்  மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் நடைபெற்று வருவதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக வரக்கூடிய 15, தேதி கிணத்துக்கடவு பகுதியில் 80 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை கலந்து கொள்ள வருகிறார். கோவை வரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் விதமாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து முதல்வர் வரவேற்பு தொடர்பான நிகழ்வுகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழகத்தில் இதற்கு முன்பாக சில ஆண்டுகள் அதிமுக ஆட்சி நடைபெற்றது. மின்மிகு மாநிலம் என்று கூறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அப்போது மின் இணைப்பு கோரி நான்கரை லட்சம் விவசாயிகள் மனு அளித்திருந்த்து காத்திருந்தனர். ஆனால் 20,000 குறைவானவர்களுக்கே மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது மு க ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு ஓராண்டு காலத்திலேயே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 50,000 பேருக்கு வழங்கப்பட உள்ளது. தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக கழக ஆட்சி ஐந்தாண்டுகளை நிறைவு செய்வதற்கு முன்பாக தமிழகத்தில் 6250 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது” எனக் கூறினார்.